Wednesday, June 25, 2008

இந்த 'வீக்கம்' எப்போது குறையும்?



விண்ணுக்குப் பாய்கிற விலைவாசியை நினைத்தால் தூக்கம் பிடிக்காது... ஆனால் அந்த விலை ஏன், எதற்கு, எப்படி உயர்ந்தது எனச் சொல்ல முற்பட்டால் கொட்டாவியுடன் சேர்த்து தூக்கம் கண்களைச் சுழற்றும். அத்தனைச் சிக்கல் கொண்ட வறட்டுச் சமாச்சாரம்தான், ஆனால் அலுத்துக் கொள்ளாமல் தொடருங்கள்.

எப்போதெல்லாம் நாட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கிறதோ அப்போது விலைகள் கட்டுக்கடங்காமல் போகும். அதிகரிக்கும் பணப் புழக்கத்துக்கேற்ப நாட்டில் பொருட்களின் உற்பத்தி மற்றும் சப்ளை (production and supply) இல்லாத நிலையில் பொருட்களின் விலை ஒன்றுக்குப் பத்து மடங்காகிறது. இதைத்தான் பணவீக்கம் என்கிறோம்.

பங்குகள் மீதான யூக வர்த்தகம், பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வது, அதன் தொடர்ச்சியாக மற்ற பொருட்களின் விலை உயர்வது எல்லாமே இந்த சப்ளைக்கும்-தேவைக்கும் இடையே ஏற்படும் இடைவெளியைப் பெரிதாக்கி பணவீக்கத்தை வெடிக்குமளவுக்குக் கொண்டு போய்விடுகின்றன.

இந்தியாவில் ஏற்கெனவே 8 சதவிகிதம் இருந்த பணவீக்கத்தை, பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு மட்டுமே மேலும் 3 சதவீதம் அதிகரி்க்கச் செய்துவிட்டது.

இதற்கு மார்ஷல்ஸ், கீன்ஸ், மார்க்ஸ் என பல்வேறு அறிஞர்களின் விளக்கங்களுக்குப் போனால் விடிந்துவிடும். அதனால் அடுத்த கட்டத்துக்குப் போய்விடுவோம்.

பணவீக்கத்தை அளவிடுவது எப்படி?:

ரொம்ப சிம்பிள்... தொடர்ந்து ஒரு மூன்றாண்டுகள் நாட்டில் பல்வேறு பொருட்கள் விற்கப்பட்ட விலையைக் கணக்கிலெடுத்துக் கொள்ளுங்கள். இதில் அதிக விலை மாறுதல் இல்லாத ஒரு ஆண்டை 'பேஸ் இயர்' அதாவது நிலை ஆண்டாகக் கொள்ள வேண்டும். மற்ற இரு ஆண்டுகளிலும் ஏற்பட்டுள்ள விலை மாறுதலுக்கும், நிலை ஆண்டு விலைக்கும் இடையில் உள்ள மாறுதல் விகிதம்தான் பண வீக்கத்தின் அளவாகப் பார்க்கப்படுகிறது.

இதனை நுகர்வோர் விலைக் குறியீட்டு முறை கணக்கீடு (கன்ஸ்யூமர் பிரைஸ் இண்டக்ஸ்-CPI) என்கிறார்கள்.

வீக்கத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?:

விர்ரென்று ஏறிக் கொண்டேயிருக்கும் பணவீக்கத்தைக் கொஞ்சமாவது கட்டுக்குள் கொண்டு வர, மத்திய ரிசர்வ் வங்கிதான் முயற்சி மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால் அரசின் பணக் கொள்கைகளை வகுப்பதும் நேரம் பார்த்து திறம்பட செயல்படுத்துவம் ரிசர்வ் வங்கியின் கையில்தான் உள்ளது.

ஆனால் அந்த ரிசர்வ் வங்கியிலும் அரசியல் விளையாடிய ஆட்டம் இருக்கிறதே... வெளியே சொன்னால் கேவலம்.

சி.ரங்கராஜன் கவர்னராக இருந்த காலம் வரை ரிசர்வ் வங்கிக்கு தெளிவான பணவியல் கொள்கைகளை நமது அரசு வகுத்துக் கொடுக்கவே இல்லை அல்லது வகுத்துக் கொள்ள விடவும் இல்லை.

இதைப் பின்னாளில் அவரே ஒரு புத்தகத்திலும் குறிப்பிட்டுள்ளார்.

விஷயத்துக்கு வருவோம்...

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியிடம் உள்ள முதல் ஆயுதம் வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் எனப்படும் சிஆர்ஆரை அதிகரிப்பது. இந்த ஆயுதத்தைத்தான் இப்போது கையிலெடுத்துள்ளது ரிசர்வ் வங்கி.

அது என்ன ரொக்க இருப்பு விகிதம்?:

ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒவ்வொரு வணிக வங்கியும் குறிப்பிட்ட அளவு ரொக்கத்தை ரிசர்வ் வங்கியில் கட்டாயமாக இருப்பு வைத்துவிட்டுத் தான் தனது வர்த்தகத்தைக் கையாள வேண்டும். அதைத்தான் ரொக்க இருப்பு விகிதம் என்கிறார்கள்.

இந்த ரொக்க இருப்பு விகிதத்தை பொருளாதார நிலைமைகளுக்கேற்ப மாற்றிக் கொள்ளும் அதிகாரம் மத்திய ரிசர்வ் வங்கிக்கு அளிக்கப்பட்டுள்ளது. சொல்லப் போனால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு வசமுள்ள ஒரே சட்டப்பூர்வ ஆயுதம் இந்த ரொக்க இருப்பு விகித கட்டுப்பாடுதான்.

எவ்வளவு உயர்த்தலாம்?:

அதற்காக வங்கி ரொக்க இருப்பு விகிதத்தை ரிசர்வ் வங்கி ஒரேயடியாக உயர்த்திவிட முடியாது.

உதாரணம்: ஒரு வங்கி ரூ.20,000 கோடி வரை வர்த்தகத்தைக் கையாளுவதாகக் கொள்வோம். அதில் ரூ. 1,800 கோடி வரை ரிசர்வ் வங்கியில் ரொக்க இருப்பு வைத்திருக்க வேண்டும். ஒரு வேளை, திடீரென பணவீக்கம் அதிகரிக்கும் போது, ரிசர்வ் வங்கி இந்த ரொக்க இருப்பை ரூ. 2,300 கோடியாக அதிகரிப்பதாக வைத்துக் கொள்வோம்.

இப்போது வங்கி மூலம் வெளியில் செல்லும் பணத்தில் ரூ.500 கோடி வரை ரிசர்வ் வங்கியிடம் வந்துவிடுகிறது. சந்தையில் இருந்து ரூ. 500 கோடி 'உறிஞ்சப்படுகிறது'. ஒரு வங்கி மூலம் மட்டுமே இந்த அளவு பணம் கட்டுப்படுத்தப்படுகிறது என்றால், நாட்டில் உள்ள அனைத்து வங்கிகள் (கிளைகள் அல்ல) மூலமும் கட்டுப்படுத்தப்படும் பணத்தின் அளவு எவ்வளவு பாருங்கள்...

இப்போது எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது?:

மத்திய ரிசர்வ் வங்கி இம்முறை முன் தேதியிட்டு 8.75 சதவிகிதமாக சிஆர்ஆரை உயர்த்தியுள்ளது. அதாவது ஏப்ரல் 26 முதல் 5 கட்டங்களாக புதிய சிஆர்ஆர் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி.

ஏப்ரல் 26 முதல் மே 10 வரையிலான 15 நாட்களுக்கு 0.25 சதவிகிதம், மே 11 முதல் 25 ம் தேதி வரையுள்ள காலகட்டத்துக்கு 0.25 சதவிகிதம் என இரண்டரை மாதங்களுக்கு மொத்தம் 0.50சதவிகித அளவுக்கு ரொக்க இருப்பு விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி 8.25 சதவிகிதத்திலிருந்து 8.75 சதவிகிதமாக சிஆர்ஆர் உயர்கிறது.

பொதுவாக இம்மாதிரி நேரங்களில் மத்திய அரசு இன்னொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். அது பொருட்களின் உற்பத்தியையும், சப்ளையையும் அதிகரிப்பது மற்றும் அநாவசியச் செலவுகளைக் குறைப்பது.

உலகில் எந்த நாட்டாலும் உற்பத்தியை நினைத்தவுடன் எல்லாம் அதிகரித்துவிட முடியாது. இதனால் இரண்டாவது option-யை கையில் எடுத்தார் பிரதமர்.

செலவை குறையுங்கள், வெட்டியாய் வெளிநாடு போகாதீர்கள் என்று அமைச்சர்களுக்கும், காரையும் லைட்டையும் தேவையில்லாமல் பயன்படுத்தாதீர்கள் என டி.வி மூலம் கவலை தோய்ந்த முகத்துடன் நமக்கும் அறிவுரை சொன்னார் பிரதமர்.

ஆனால், இந்த அறிவுரையை யாரும் சீரியசாக எடுக்க மாட்டார்கள் என்று பிரதமருக்கு தெரியாதா என்ன.. இதனால் தான் அடுத்த சீரியஸ் option-ஆன பணப் புழக்கத்தின் அளவை கட்டுப்படுத்தும் அஸ்திரத்தை பயன்படுத்தியுள்ளார், ரிசர்வ் வங்கி மூலமாக.

இதன் மூலம் வங்கிகள் வசம் உள்ள பணத்தில் ஒரு பகுதியை ரிசர்வ் வங்கி முடக்கிவிட்டது.

இதனால் வங்கிகள் தங்கள் பங்குக்கு, வட்டி விகிதத்தை தாறுமாறாக உயர்த்தும். வீட்டுக் கடன்கள், நுகர்வோர் கடன்கள் போன்றவற்றுக்கான முன்னுரிமை குறைக்கப்படும் அல்லது நிறுத்தப்படும்.

அல்லது, உயர்ந்துவிட்ட வட்டியைப் பார்த்து நாமாகவே கடன் வாங்குவதைக் குறைத்துக் கொள்வோம். இன்றைக்கு மாதச் சம்பளக்காரர்களின் வீடுகளை அலங்கரிக்கும் பொருட்கள் எல்லாம் சம்பளப் பணத்தில் மட்டுமே வாங்கியவையென்று கூற முடியுமா... அவையெல்லாமே பல்வேறு நுகர்வுக் கடன்கள்தானே, பொருட்களாக மாறி இடத்தை அடைத்துள்ளன.

இந்த கடன் வசதி நின்று போனால் தானாகவே வாங்கும் சக்தியும் நின்றுபோகும் அல்லவா... அப்போது பொருட்களின் சப்ளையும் , வெளியில் புழங்கும் பணத்தின் அளவும் சமநிலைப்படும். விலையும் ஒரு கட்டுக்குள் வரும்.

இந்த நிலை தான் கட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம்.

பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வர ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரிப்பது ஒரு வகை முதலுதவி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்... ஆனால் இதுவே நிரந்தரத் தீர்வல்ல.

ஆனால், உண்மையில் நிரந்தரத் தீர்வுகளும் நிறையவே உள்ளன. அதற்குத் தேவை 'பொலிட்டிகல் வில்' என்பார்களே அந்த சமாச்சாரம்.

இந்தியாவிலாவது பண வீக்கம் 11.05 சதவீதம். சீனாவில் இன்றைக்கு பணவீக்கத்தின் அளவு மிக மிக அதிகம், அதாவது 15 சதவிகிதம். ஆனல் அவர்களது பொருளாதாரம் முடங்கி விடவில்லை. கடந்த ஜனவரி மாதம் விண்ணுக்குப் போன விலைகள் இன்று மெல்ல தரையைத் தொடும் நிலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

காரணம் அந்த நாடும் அரசும் காட்டும் 'பொலிடிக்கல் வில்'.. அது என்னப்பா வில்.. அம்பு என்கிறீர்களா...

உங்களுக்கு இப்போதே 'கண்ணை கட்டியிருக்கும்'..

(கட்டுரையாளர் -ஷங்கர்)

1 comments:

சந்திப்பு said...

I like this article

you just go through my article on inflation

santhipu