Wednesday, December 16, 2009

ஊழல்களின் தேசம் !



நல்ல மனிதர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதே தீவினையின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

Edmond Burke


1993 மும்பை குண்டு வெடிப்பின் போது

இன்று இந்தியாவில் ஊழல் ஒரு மிகச் சாதாரணமான ஒரு விஷயமாகிப் போய் விட்டது. ஊழலைப் பொறுத்தவரை நமக்கு மிக அதிகமான சகிப்புத் தன்மை வளர்ந்து, ஊழலை ஒரு பொருட்டாகவே நாம் கருதாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

ஊழல் என்ன அவ்வளவு பெரிய விஷயமா ? எல்லோரும்தான் ஊழல் செய்கிறார்கள், யார்தான் ஊழல் செய்யவில்லை என்று கேட்பீர்கள்.


1993ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பை மறந்திருக்க மாட்டீர்கள்.

250 பேர் இறந்தார்கள். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். இந்த சதிச்செயலில் 1500 கிலோவுக்கும் மேற்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து பயன்படுத்தப் பட்டது.

1993 பிப்ரவரி 2 மற்றும் 8 தேதிகளில் 1500 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து, இந்திய கடல் வழியாக சட்ட விரோதமாக வருவதற்கு காரணம் யார் தெரியுமா ?

மும்பை மாநகரத்தின் கூடுதல் கஸ்டம்ஸ் கலெக்டராக இருந்த சோம்நாத் தாப்பா.

மும்பை ஸ்ரீவர்தன் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ண பாட்டீல் கோந்கா செக்போஸ்டில், ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து வைக்கப் பட்டிருந்த வண்டியை இடை மறித்து, பணம் பெற்றுக் கொண்டபின் மும்பை செல்ல அனுமதித்தவர்.

அடுத்து கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவந்த் கவுரவ். இவர், வெடிப்பொருள் இருந்த வண்டியை, மும்பை நகருக்குள் வரும் வரை பாதுகாப்புக்காக தன்னுடைய காரில், வந்து விட்டுச் சென்றவர்.


இந்த அரசு அதிகாரிகள், லஞ்சம் வாங்காமல் தங்களுடைய கடமையைச் செய்திருந்தால் 250 அப்பாவி மக்கள் இறந்திருக்க மாட்டார்கள். 700 அப்பாவிகள் படுகாயமடைந்திருக்க மாட்டார்கள்.



சுதந்திர இந்தியாவில், ஊழலை இப்போதும், அப்போதும், தாலாட்டி சீராட்டி வளர்த்தெடுத்து, இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்பதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான்.



காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கப் பட்ட கட்சிகள் அனைத்தும், இன்று காங்கிரஸ் அரவணைப்பில் இருப்பதற்கு காரணமும், காங்கிரஸ் கட்சியின் ஊழல் கலாச்சாரம்தான்.

நகைச்சுவையாக ஒரு கதை சொல்வார்கள். நேரு பிரதமராக இருந்த காலத்தில், கட்சிக்காக எவ்வளவு பணம் வாங்கப் படுகிறது என்பதே நேருவுக்கு தெரியாது. இந்திரா காலத்தில், இந்திரா பெட்டிகளை எண்ண ஆரம்பித்தார். ராஜீவ் காலத்தில் சில்லரைகளையும் எண்ண ஆரம்பித்தார் என்று காங்கிரஸ் கட்சியின் மதிப்பீடுகளின் வீழ்ச்சியை குறிப்பிடுவார்கள்.



1993 வி.கே.கிருஷ்ண மேனன்.


சுதந்திர இந்தியா சந்தித்த முதல் ஊழல் நேருவின் நம்பிக்கைக்கு பாத்திரமான நெருங்கிய நண்பரும், அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்த வி.கே.கிருஷ்ண மேனன் சம்பந்தப் பட்டது.

1948ம் ஆண்டில் இங்கிலாந்துக்கான இந்திய தூதராக கிருஷ்ண மேனன் இருந்தார். அப்போது, பாகிஸ்தானுடன் போர் துவங்கிய நிலையில, லண்டனைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய ஒரு நிறுவனத்திடமிருந்து 2000 ஜீப்புகள் வாங்க பரிந்துரை செய்தார். அந்நிறுவனத்திற்கு, ஏறக்குறைய மொத்த பணமும் முன்பணமாகவே வழங்கப் பட்டது.

2000 ஜீப்புகளுக்கு பதிலாக வெறும் 155 ஜீப்புகள் மட்டுமே, அவையும் தரம் குறைந்ததாக வந்து சேர்ந்தது. இது பற்றி பத்திரிக்கைகளில் பெரிய அளவில் செய்திகள் வந்தும், நேரு கிருஷ்ண மேனனை பாதுகாப்புத் துறை அமைச்சராக்கினார். இந்த ஊழலில் மொத்த மதிப்பு ரூபாய் 80 லட்சம்.


1949ல் ராவ் சிவ பகதூர் சிங் என்பவர், ஒரு வைரச் சுரங்க உரிமத்தை புதுப்பித்து தருவதற்காக சச்சேந்திர பாரன் என்ற வைர வியாபாரியிடம் ரூ.25,000 லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்த ராவ் சிவ பகதூர் சிங் யார் தெரியுமா ? மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த அர்ஜுன் சிங்கின் தந்தை.


அடுத்த ஊழல், 1951ம் ஆண்டில், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை செயலாளராக இருந்த எஸ்.ஏ.வெங்கட்ராமன் சம்பந்தப் பட்டது. ஒரே நிறுவனத்துக்கு சைக்கிளின் உதிரி பாகங்கள் அனைத்தையும் இறக்குமதி செய்ய ஆணையிட்டதில் ஊழல் நிரூபிக்கப் பட்டு, வெங்கட்ராமன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.


அடுத்த ஊழல் 1958ம் ஆண்டு, வெளி வந்த “முந்த்ரா ஊழல்“ என்று அழைக்கப் பட்ட ஊழல் தான். இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்தது யார் தெரியுமா ?

நேருவின் மருமகனும், இந்திராவின் கணவருமான பெரோஸ் காந்தி.



1993 பெரோஸ் காந்தி


1957ம் ஆண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த ஹரிதாஸ் முந்த்ரா என்பவர்தான் இந்த ஊழலுக்கு வித்து. கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர்தான் ஹரிதாஸ் முந்த்ரா. இவர் பங்குச் சந்தையிலும் ஹர்ஷத் மேத்தாவுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.

இவரது 6 தொழில் நிறுவனங்களின் பங்குகள், பங்குச் சந்தையில் அசுர வீழ்ச்சி அடைந்ததனால் இந்நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு நிறுவனமான எல்.ஐ.சி யை வாங்க வைத்தார். எல்ஐசியும், அப்போதைய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் ஆலோசனையின் பேரில், 1.25 கோடிக்கு, முந்த்ராவின் ஆறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியது.

ஆனால், வாங்கிய பங்குகள் அனைத்தும், விலை வீழ்ச்சியடைந்து, எல்ஐசியின் மொத்த முதலீடும் காணாமல் போனது. இது தொடர்பாக, பெரோஸ் காந்தி பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் 1958ம் ஆண்டு கேட்ட கேள்வி, இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியது.

இது தொடர்பாக சொல்லப் படும் ஒரு நகைச்சுவை கதை சுவையானது.

நேருவின் மருமகன் ஆனதால், நிதி அமைச்சல் டிடிகே, பெரோஸ் காந்தியை நேரு குடும்பத்தின் செல்ல நாய் என்று கூறுவது வழக்கம்.


முந்த்ரா ஊழல் தொடர்பாக தனது பேச்சை தொடங்கிய பெரோஸ் காந்தி “நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி என்னை நேரு குடும்பத்தின் வளர்ப்பு நாய் என்று கூறுகிறார். அவர் தன்னை பாராளுமன்றத்தின் தூண்களில் ஒருவர் என்று கூறிக்கொள்கிறார். ஒரு நாய், தூணைப் பார்த்தால் என்ன செய்யுமோ அதை நான் இப்போது செய்யப் போகிறேன்” என்று கூறிவிட்டு பேச்சைத் தொடங்கினார் என்று கூறுவார்கள்.


பெரோஸ் காந்தியின் குற்றச் சாட்டைத் தொடர்ந்து, நாடெங்கும் பெரும் அமளி கிளம்ப, நேரு, நீதிபதி சாக்லா என்பவர் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார். நீதிபதி சாக்லா தனது அறிக்கையை சமர்ப்பிக்க எடுத்துக் கொண்ட கால அவகாசம் என்ன தெரியுமா ? 24 நாட்கள்.

நீதிபதி லிபரான் தனது அறிக்கையை சமர்ப்பிக்க எடுத்துக் கொண்ட 18 ஆண்டுகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.

நீதிபதி சாக்லா தனது அறிக்கையில் இந்த ஊழலுக்கு அப்போதைய நிதித் துறை செயலர் ஹரிபாய் படேல், மற்றும் இரண்டு எல்ஐசி அதிகாரிகளே இந்த ஊழலுக்கு காரணம், அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி நிதித் துறைச் செயலரின் நடவடிக்கைகளுக்கு, நிதி அமைச்சர் என்ற வகையில் கிருஷ்ணமாச்சாரியும் பொறுப்பு என்று கூறினார். கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.

இதற்கு அடுத்த பெரிய ஊழல் 1958ம் ஆண்டில், இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் முதலாளி ராமகிருஷ்ண டால்மியாவை பற்றியது. ராமகிருஷ்ண டால்மியா தன்னுடைய காப்பீட்டு நிறுவனமான பாரத் இன்ஷுரன்ஸ் நிறுவனத்திலிருந்து, 2.5 கோடியை கையாடல் செய்தார்.


1962ம் ஆண்டு தேஜா கேப்பர் ஊழல் என்று அழைக்கப் படும் ஊழல். ஜெயந்தி தர்மா தேஜா என்பவர், ரூபாய் 200 முதலீட்டில் ஒரு கப்பல் நிறுவனத்தை துவங்கினார். இந்நிறுவனத்திற்கு அரசிடமிருந்து 200 கோடியை கடனாகப் பெற்றார்.

இந்நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குதாரர்களின் பணம் அனைத்தும், ஜெயந்தி தர்மா தேஜாவின் சொந்த வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப் பட்டது. 1970ல் லண்டனில் கைதான தேஜா, காவலில் இருந்து தப்பிச் சென்றார். இன்று வரை அவர் எங்கிருக்கிறார் என்ற விபரம் இல்லை.

1962ம் ஆண்டு, பஞ்சாப் முதல்வராக இருந்த பிரதாப் சிங் கேரோன் மீது அதிகார துஷ்பிரயோக குற்றச் சாட்டு எழுந்தது. இது பற்றி விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டது.

நீதிபதி தாஸ் தனது அறிக்கையில், ஒரு தந்தை, தனது மகன்கள் செய்யும் எல்லா காரியங்களுக்கும் பொறுப்பாக முடியாது என்றாலும் முதலமைச்சராக இருப்பவருக்கு தனது மகன்களின் செயல்களுக்கு தார்மீக பொறுப்பு உள்ளது என்று அறிக்கை அளித்தார். இதை ஏற்ற பிரதாப் சிங் கேரோன், உடனடியாக பதவி விலகினார்.


அடுத்த ஊழல், 1971ம் ஆண்டில் நகர்வாலா ஊழல் என்று பிரபலமாக அழைக்கப் பட்ட ஊழல். 1971ம் ஆண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பாராளுமன்ற தெரு கிளையின் தலைமை காசாளர் வேத பிரகாஷ் மல்ஹோத்ராவுக்கு இந்திரா காந்தியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் 60 லட்சம் ரூபாயை எடுத்து, பங்களாதேஷை சேர்ந்த ஒரு நபருக்கு அளித்தார்.

பின்னர், விசாரணையில் இந்திய உளவுப் பிரிவைச் சேர்ந்த ரஸ்தம் சோரப் நகர்வாலா என்பர்தான் இந்திராவின் குரலில் பேசினார் என்று கண்டிறியப்பட்டது. கைது செய்யப் பட்ட நகர்வாலா, சந்தேகத்திற்குரிய முறையில் 1973ம் ஆண்டு, சிறையிலேயே இறந்தார்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி காஷ்யப் மர்மமான முறையில் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.


1976ம் ஆண்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஹாங்காங்கைச் சேர்ந்த, இல்லாத ஒரு நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்பட்ட நஷ்டம் 2.2 கோடி.


1981ல் மகாராஷ்டிராவின் அப்போதைய முதல்வர் பிசினெஸ் நிறுவனங்களிடமிருந்து பெற்ற பணத்தை, தனக்கு சொந்தமான ஒரு தனியார் ட்ரஸ்டில் டெபாசிட் செய்த தொகை 30 கோடி.


1987ல் ஜெர்மனியைச் சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் நிறுவனம், கப்பல் விற்பதற்காக இந்திய அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சப் பணம் 20 கோடி.


1982ம் ஆண்டு மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்த அர்ஜுன் சிங், சுர்ஹத் குழந்தைகள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் லாட்டரி டிக்கட்டில் 5.4 கோடி ஊழல் புரிந்தார் என்று குற்றச் சாட்டு எழுந்தது. ஆனால், இந்த குற்றச் சாட்டு நிரூபிக்கப் படவேயில்லை.


இதற்குப் பிறகு, இந்தியாவை உலுக்கி, ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்த மிகப் பெரும் ஊழல் போபர்ஸ் ஊழல்.


1987 ஏப்ரல் 16ல், சுவீடன் வானொலி போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பெரிய அளவில் லஞ்சம் கொடுத்து இந்த போபர்ஸ் பீரங்கி வாங்கப் பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இந்தியாவில் பெரும் புயல் கிளம்பியது.


இந்த பேரத்தில் லஞ்சமாக 139 கோடி ரூபாய்கள் ராஜீவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான ஒட்டாவியோ கொட்டரோக்கியின் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நார்ட்பினான்ஸ் வங்கியின் 18051-53 என்ற கணக்கில் போடப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த ஊழல் வெளியானதால், ஆட்சியை இழந்த ராஜீவ், கடைசி வரை இந்த புகாரை மறுத்து வந்தார். கடும் போராட்டத்துக்கு பிறகு வி.பி.சிங் பிரதமாரான பிறகு, சிபிஐ, இவ்வழக்கில் விசாரணையை துவக்கியது. பல ஆண்டுகள் கடந்தும், இவ்வழக்கில் ஒருவருமே தண்டிக்கப் படவில்லை.


காங்கிரஸ் 2004ல் பதவியேற்றதும், முடக்கி வைக்கப் பட்டிருந்து கொட்டரோக்கியின் வங்கிக் கணக்குகள், ரிலீஸ் செய்யப் பட்டன. பத்திரிக்கைகளில் இச்செய்தி வெளியாகி, பரபரப்பாவதற்குள், கொட்டரோக்கி, மொத்த பணத்தையும், வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து விட்டார்.

இன்று, காங்கிரஸ் அரசாங்கம், இந்த வழக்கை மொத்தமாக மூட, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.


1990ல் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் போயிங் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யாமல், ஏர் பஸ் நிறுவனத்தோடு செய்த ஒப்பந்தத்தால் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு வாரத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் 2.5 கோடி.


இதற்குப் பிறகு இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல் 1992ம் ஆண்டு ஹர்ஷத் மேத்தா ஊழல். ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழலின் மொத்த ஊழல் தொகை 5000 கோடிக்கும் மேல்.



ஹர்ஷத் மேத்தா


இந்திய பங்குச்சந்தையில் நாட்டுடைமையாக்கப் பட்ட வங்கிகளின் பணத்தை வைத்து, பல பங்குகளின் விலையை ஏற்றவும் இறக்கவும் செய்த ஹர்ஷத் மேத்தா ஊழல் வெளி வந்ததும், பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைக் கண்டது. ஹர்ஷத் மேத்தா, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு 1 கோடி ரூபாயை லஞ்சமாக கொடுத்ததாக திடுக்கிடும் புகாரைக் கூறினார்.

இந்த பங்குச் சந்தை ஹர்ஷத் மேத்தா ஊழல் தொடர்பாக விசாரிக்க கூட்டுப் பாராளுமன்றக் குழு அமைக்கப் பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையில் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் எஸ்.வெங்கட்ராமன், துணை கவர்னர்கள் அமிதவ் கோஷ் மற்றும் ஆர்.ஜானகிராமனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் படவேண்டும் என்று பரிந்துரை அளித்தது.

மேலும், மத்திய அமைச்சர்கள் ராமேஷ்வர் தாகூர், சங்கரானந்த், மாதவராவ் சிந்தியா, மன்மோகன் சிங் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களையும் வைத்திருந்தது. ஆனால், நரசிம்ம ராவ், இந்த பரிந்துரையின் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.


1993 முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்


அடுத்து 1994ம் ஆண்டின் சர்கரை இறக்குமதி ஊழல். மார்க்கெட்டில், சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டு, சர்க்கரை விலை உயர்ந்ததையடுத்து, க்யான் பிரகாஷ் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டது.

இக்கமிஷன், சந்தையில் சர்க்கரை கிடைக்காமல் தட்டுப்பாட்டை ஏற்பட காரணம், மத்திய அமைச்சர் கல்பனாத் ராய்தான், சர்க்கரை ஆலைகளுக்கு விலையேற்றம் காரணமாக லாபம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில், கல்பனாத் ராய், இவ்வாறு செயல்பட்டுள்ளார் என்று பரிந்துரை செய்யப் பட்டது.

இந்த அறிக்கையின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போட்டார் நரசிம்ம ராவ்.
தொண்ணூறுகள் தொடங்கி, ஊழல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.


1995ல் யுகோஸ்லாவியா தினார் ஊழல், மேகாலயா வன ஊழல்,

1996ல் உர இறக்குமதி ஊழல், .யூரியா இறக்குமதி ஊழல், பீகார் மாட்டுத் தீவன ஊழல்,

1997ல் சுக்ராம் ஊழல், லவ்லீன் திட்ட ஊழல், பீகார் நில பேர ஊழல், பன்சாலி பங்கு வர்த்தக ஊழல்,

1998ல் தேக்கு மரக்கன்று ஊழல்,

2001ல் யுடிஐ ஊழல், தினேஷ் டால்மியா பங்கு வர்த்தக ஊழல், கேத்தன் பரேக் பங்கு வர்ததக ஊழல்,

2002ல் சஞ்சய் அகர்வாலின் வீட்டு வர்த்தக ஊழல்,

2003ல் போலி முத்திரைத் தாள் ஊழல்,

2005ல் பங்கு வர்த்தக ஐபிஓ ஊழல், பீகார் வெள்ள நிவாரண ஊழல், ஸ்கார்ப்பீன் நீர்மூழ்கி கப்பல் ஊழல்,

2006ல் பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல், உத்தரப் பிரதேசத்தில் தாஜ் காரிடார் ஊழல்,

2008ல் பூனேவைச் சேர்ந்த ஹசன் அலி கான் வருமான வரி ஏய்ப்பு, சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்ட்டிரா ஊழல், ஸ்விஸ் வங்கிகளில் இந்தியக் கருப்புப் பணம், ஜார்க்கண்ட் மருத்துவ உபகரணங்கள் ஊழல், அரிசி ஏற்றுமதி ஊழல், ஒரிஸ்ஸா சுரங்க ஊழல் மற்றும் இறுதியாக மது கோடாவின் ஊழல் என ஊழல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.



இந்த ஊழல் வழக்கில் தண்டிக்கப் பட்டவர்கள் என்று எடுத்தால், 1 சதவிகிதத்திற்கும் கீழே. இருப்பார்கள்.

இந்த ஊழல் பட்டியலில் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் போது, எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் விலை கொடுத்து வாங்கப் படுவது சேர்க்கப் படவில்லை.

கடந்த மன்மோகன் சிங் ஆட்சியின் போது, ஒரு எம்பியின் விலை 25 கோடி என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. தற்போது, எடியூரப்பா அரசாங்கத்தை காப்பாற்றவும், ஒரு எம்எல்ஏவின் விலை 25 கோடிக்கும் மேல் என்று தகவல்கள் வந்துள்ளன.


சுதந்திர இந்தியா சந்தித்துள்ள ஊழல்களின் மொத்த மதிப்பு 80 லட்சம் கோடியைத் தாண்டுகிறது.


இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே, அதாவது மாதம் ரூபாய் 300க்கும் கீழே சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 30 கோடி. இந்தப் புள்ளி விபரம், இந்திய அரசின் கணக்கு. யதார்த்த நிலை இன்னும் மோசமாகவே இருக்கும்.


இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்ட நபர்கள், கட்சி வித்தியாசங்களை கடந்து அனைத்து கட்சிகளிலும் உள்ளனர். தேர்தலை சந்திக்கவும், கட்சித் தாவும் எம்எல்ஏ எம்பிக்களை விலைக்கு வாங்கவும், கருப்புப் பணம் பயன்படுவதால், ஊழலில் ஊறித் திளைக்க அரசியல் கட்சிகள் அஞ்சுவதே இல்லை.

சரி மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறதா ?

பெருமளவில் மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறது.

எந்த அளவுக்கு மாற்றம் என்றால், தேர்தல் வந்தால், பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.



இலவச டிவி கொடுத்தால், முண்டி அடித்துக் கொண்டு, வாங்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.



1993 கே.கே.நகரில் வெள்ள நிவாரணம் வழங்கும் போது நெரிசலில் சிக்கி தன் உறவினரை இழந்தவர்கள் கதறி அழுகின்றனர்


வெள்ள நிவாரணத் தொகை வழங்கினால் நள்ளிரவில் ஒருவரை ஒருவர் ஏறி மிதித்து, 42 பேரை கொன்று, 2000 ரூபாய் பெரும் அளவுக்கு மாறி இருக்கிறது.

ஹெல்மெட் கட்டாயம் போட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், ட்ராபிக் போலீஸ் காரருக்கு லஞ்சம் கொடுத்தாவது, ஹெல்மெட் போடுவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.



டிஎன்பிஎஸ்சி தேர்வு வந்தால், யாரைப் பிடித்தாவது, லஞ்சம் கொடுத்து, அரசு வேலை வாங்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.

அடுத்தவன் குடியைக் கெடுத்தாவது தானும் தன் குடும்பமும் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் எனும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.

பேய்கள் அரசு செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்றான் பாரதி. சாத்திரங்கள் பிணந்தான் தின்று கொண்டிருக்கின்றன.

Monday, December 7, 2009

சீமான்! சீறும் சிறுத்தையா? சிந்திக்கும் போராளியா?

சீறும் சிறுத்தையா? சிந்திக்கும் போராளியா? எதுவாக இருக்கப் போகின்றார் சீமான். பெரியாரின் பேரன், பிரபாகரனின் தம்பி, உங்கள் பிள்ளை சீமான் வந்திருக்கின்றேன் என ஏறும் மேடைகளில் முழங்கும் சீமானை ஆர்பரித்துக் கைதட்டி வரவேற்கிறது இளைய தமிழகம். உணர்வும், ஆர்வமும் தமிழின்பால் கொண்டிருக்கும் இளைஞர் சீமான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

கிராமத்துப் பேச்சுமொழியும், தோற்ற நெருக்கமும், உணர்ச்சிப் பேச்சும் சீமான் பால் தமிழ இளைஞர்கள் கவரப்படும் சாத்தியங்களை அதிகரிக்கவே செய்கிறது. ஆனால் தன்னை ஆர்பரித்து வரவேற்கின்ற இளைய தலைமுறையை எவ்விதம் வழிநடத்தப் போகின்றார் சீமான் ?. அவர்களுக்கு இவர் என்ன சொல்லப் போகின்றார், என்ன செய்யப் போகின்றார் என்பதில்தான் இவரது அரசியல் எதிர்காலமும், இவரை வரவேற்போர் அரசியலும் இருக்கப் போகிறது என்பதுதான நிச்சயமான உண்மை.

இந்த உண்மையின் தாத்பரியத்தை சீமான் உணர்ந்திருக்ககின்றாரா என்பது சரிவரத் தெரியவில்லை. வரும் மே மாதம் அவரது 'நாம் தமிழர் ' இயக்கம் அரசியல் அமைப்பாக மாறும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அதன்பின்னர் அவரது செயலின் வீரியம் சிலவேளை புரியவும் கூடும். சிறந்த பேச்சாற்றலும், நிறைந்த தமிழுணர்வும் கொண்டுள்ள சீமானின் அரசியற்பிரவேசம் அர்த்தமற்றதாக போய்விடக் கூடாதென்பதற்கான அக்கறையில் வருகிறது இச்சிறப்புப் பார்வை.

தமிழக அரசியலில் சிறந்த பேச்சாளர்கள், நிறைந்த அரசியற் பிரபலம் பெற்றமை வரலாறு. குறிப்பாகக் திராவிடக்கட்சிகள் தமிழகத்தில் பலம் பெறுவதற்கான அடிப்படைகளில் அது ஒன்று என்ச் சொன்னால் மிகையாகாது. அண்ணா, கலைஞர், வை.கோ, என்ற வரிசையில, தன் பேச்சாற்றலால் இளைஞர்களைத் திரள வைக்கும் திறமை பெற்றிருக்கின்றார் சீமான் என்பது அவரது அன்மைக்காலப் பேச்சுக்களுக்கு காணப்படும் இளைஞர்களின் ஆர்வத்தில் தெரிகிறது. அந்த இடத்திலேதான் அவரது சமுகங்குறித்த அக்கறைபற்றியும், அரசியல்பற்றியம் கேள்வியும் எழும்புகிறது.

முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுள்ளது. 'பேச்சும் ஒரு ஆயுதம், ஆதலால் இளைய தலைமுறையிடம் போ, அவர்களிடம் பேசு' எனப் பிரபாகரன் தனக்குக் கட்டளையிட்டதாக மேடைகள் தோறும் கூறிவருகின்றார் சீமான். அப்படிக் கூறும் அவர் அவசியம் அறிந்து வைத்திருக்க வேண்டிய மற்றொரு விடயம், மக்கள் அரசியலற்ற ஆயுதம், போராட்டத்தில் வெற்றி தராது என்பதை. இதைப் பிரபாகரனின் களத்திலிருந்தம் தெரிய முடியும், வை.கோ வின் இடத்திலிருந்தும் புரிய முடியும்.

ஆகவே உணர்ச்சிப் பெருக்கான பேச்சுக்களால் உடன் திரளும் இளைஞர்களை, உருப்படியான மக்கள் அரசியலாளர் ஆக்குவதற்குரிய பணிகளை ஆரம்பத்திலிருந்தே கவனத்திற் கொள்ளவேண்டும். அப்படியில்லாது கிராமங்கள் தோறும் மேடைகள் போட்டு உணர்சிப்பேச்சுக்களை உரக்கப் பேசுவதுடன் மட்டும் நிறுத்திக் கொண்டால். விடிய விடியத் திருவிமாக் கூத்து ஆடியதற்கு ஒப்பாகவிடும் உங்கள் பேச்சுக்கள்.

உண்மையில் பாரிய அரசியல் நகர்வொன்றினை நிகழ்த்த நீங்கள் திட்டம் கொண்டிருந்தால் இன்னமும் ஆழ்ந்து செயற்படுவதே பலன்தருவதாகும். அதுவன்றி கூவிக் குரல் எழுப்புவதால் உங்கள் எண்ணம் ஈடேறாது. ஏனென்றால் நீங்கள் எல்லாப் பக்கங்களிலும் குறி வைக்கப்படுகின்றீர்கள் என்பது உண்மை. அதற்குக் காரணம், அரசியல் பொய்மைகளில் மனம் புழுங்கிப் போயுள்ள, தமிழகத்தின் இளைய சமுதாயம், உங்கள் பின்னால் அணிதிரளும் வாய்ப்பு உள்ளதென்பதே.

ஈழ அரசியல் குறித்தும் , தமிழக அரசியல் குறித்தும், அனைத்து அரசியல்வாதிகளிலும் அதிருப்தியுற்றே இளைய தமிழகம் இருக்கிறது என்பதற்க சிறப்பான உதாரணம் முத்துக்குமரன் இறுதி நிகழ்வு. அதுபோல் கொந்தளித்துப்போயுள்ள அந்த இளைய தலைமுறைத் திரட்சியை, ஒருங்கமைத்து வழிநடத்தக் கூடிய, சுயநலமற்ற, நடைமுறை அரசியற்தலைமை இல்லாதிருப்பது அவலம். இநத் அவலத்துள் ஆட்பட்டிருக்கும் இளைய சமூகம் எங்கே உங்கள் பின்னால் அணி திரண்டுவிடுமோ என்ற அச்சம் அனைத்து அரசியற் தரப்பிலும் எழுந்தேயிருக்கிறது. இந்த நிலையில் நீங்கள் என்னசெய்யப்போகின்றீர்கள் என்பதே முக்கியமான கேள்வி?

ஈழத் தமிழனத்தின் இனப்படுகொலைக்குப் பின்னதாக, அந்தக் கொலைகளின் துரோகம் குறித்து, வெளிப்படையாகப் பேசும் ஒரு சில குரல்களில், ஓங்கி ஒலிக்கும் ஒற்றைக் குரலாக தெரிவது சீமானின் குரல்தான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சீமானின் உரத்த குரலில் வெளிப்படும் உணர்ச்சிப் பேச்சுக் கேட்கத் திரளும் மக்கள் மத்தியில், தமிழகத்தில் கையகப்படுத்தப்பட்ட ஊடகங்களினால் மறைக்கப்பட்ட தமிழினத் துரோகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதும், தமிழ்மக்களுக்கு இழைக்கப்படும் அரசியல் துரோகங்களை அப்பட்டமாக வெளிப்படுத்துவதும் அவர்தான்.

தமிழகத்தில் அரசியற்துரோகங்களால் அல்லற்பட்டும், தமிழனாக அவமானப்பட்டும் நிற்பதாகக் கருதும் எவனுக்கும் சீமானின் வார்த்தைகள் உயிர்ப்பூட்டுகிறது.

இயல்பாகவே எழும் கிராமத்துக் கோபம் மிக்கச் சீமான், சினிமாக்காரனாகச் சிரித்தபடிதான் திரிந்தார். ஆனால் அவரைச் சீண்டி, சினந்தெழுந்த கிராமத்தான் மாற்றியவர்கள், அசிங்கம் பிடித்த அரசியல்வாதிகள்தான். அவர்களது அராஜகங்களால் அடிபட்டு நொந்து போய்கிடந்த இளைய சமூகத்துக்கு, சீமானின் குரல் தன் குரலாய் தெரிகிறது. அதனால் அவர் பின்னே திரளுகின்றனர். திரளுகின்ற அந்த இளைய தலைமுறையை எப்படி பயனுள்ள போராட்ட சக்தியாக மாற்றப் போகின்றார் என்பதிலேயே சீமானின் எதிர்காலமும், அவரின் பின்னால் அணிதிரளும் இளைய சமூகத்தின் எதிர்காலமும் இருக்கிறது. அந்த அவதானிப்பில் தான் பின் வரும் கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.

ஈழத் தமிழர்கள் பிரச்சனையைத் தனது முதற் சுட்டியாக எடுத்து தமிழகத்தில் தமிழர் பிரச்சனையை மையப்படுத்த முனையும் சீமான் கவனத்திற் கொள்ள வேண்டிய பலவிடயங்கள் உள்ளன. அவற்றை முழுமையாக இந்தப் பத்தியில் தர முடியாது போனாலும், முக்கியமான ஒரு சிலவற்றையாவது பதிவு செய்ய முனைவது நோக்கமாகின்றது.

தமிழக அரசியலில் தனித்துவமான சக்தியாக மாறவிழையும், சீமானும் , அவரது நாம் தமிழர் இயக்கமும் பயனிக்க வேண்டிய தூரம் நெடுந்தொலைவு. இந்த நெடுதூரப் பயணத்திற்கும் , தமிழக அரசியற் சக்தியாக அடையாளப்படுத்துவதற்கும், ஈழவிடுதலைப்போராட்ட எண்ணப்பாடு மட்டும் போதுமானதாக இருக்காது. தமிழகமக்கள் பலருக்கும் ஈழத்தமிழ்மக்கள் மீது கரிசனமும், ஈழவிடுதலைப் போராட்டத்தில் அக்கறையும், நிறைந்த தமிழுணர்வும் இருந்தாலும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அது மட்டும் போதென்பதே தமிழகத் தேர்தற் களம் இதுவரையில் கற்றுத் தந்துள்ள பாடம். அதனாலேதான் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசிவரும் எவரும் தேர்தல் வரும்போது, பெரிய கட்சிகளுக்குள் சரண்புகுந்துகொள்கின்றனர்.

இதற்கு தமிழக அரசியலில் சிறப்பான உதாரணமாகச் சொல்லக் கூடியவர்கள் இருவர். முதலாமவர் நீண்டகாலமாக ஈழப்பிரச்சனையை எடுத்துப் பேசிவரும் மதிமுக செயலர் வை.கோபால்சாமி. மற்றையவர் விடுதலைச்சிறுத்தைகளி்ன் தலைவர் தொல். திருமாவளவன். ஈழப்பிரச்சனை, தமிழுணனர்வு என்பன குறித்து எழுச்சிமிக்க கருத்துக்களை எவ்வளவு தூரம் தமிழக மக்களிடம் முன்வைத்து நின்றாலும், தேர்தற்களமொன்றைக் காணும் தருணத்தில் , இவர்கள் தடுமாறிப்போவது தொடர்ச்சியாக நிகழ்ந்தே வருகிறது. இதற்குக் காரணம் தேர்தற்களத்தில் வெற்றியைத் தரக் கூடிய வாக்குக்களைப் பெற்றுக் கொள்ளும் காரணியாக ஈழப்பிரச்சனையோ, தமிழுணர்வோ மட்டும் அமைந்துவிடவில்லை என்பதே .

இந்த அரசியல் நிலை அவர்களுக்கு மட்டுமல்ல, சீமானுக்கும் பொருந்தும், ஏன் வேறு யாருக்கும் கூட ஏற்படலாம். 1983ல் ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தமிழகத்தில் எழுந்த அரசியற் போராட்டங்களில் ஈடுபட்ட ஆர்வத்தில் அரசியலுக்குள் வந்து, தலித் மக்கள் பிரச்சனையையும் இணைத்துக் கொண்ட தொல். திருமாவளவனால், ஈழவிடுதலைப் போராட்டத்தின் முக்கியமான தருணத்தில் எதுவும் செய்ய முடியாது போய்விடுகிறது. இதற்காக அவரது ஈழ ஆதரவினைக் குறைத்து மதிப்பிட முடியாது. இவரது அரசியற் பிரவேச காலத்தையும், இப்போதுள்ள காலத்தையும், தமிழக அரசியலில் நிலைகொள்வதற்கான வாக்கு வங்கியை உருவாக்குவது குறித்தும் , சீமான் அதிக கவனம் கொள்ள வேண்டியதும் அவசியம். உன்மையில் இதனோடு தொடர்புடைய ஏனைய விடயங்கள் வேறு சிலவும் இருக்கின்றன. ஆயினும் மேற்குறித்த இரண்டு விடயங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதாலும், அரசியற் பிரவேச நிலையில் நிற்பவர் சீமான் என்பதாலும் அவற்றை இங்கே குறிப்பிடுகின்றோம்.

அரசியலில் நிலை கொள்ள மிகஅவசியமானது தேர்தலில் வெற்றியைத் தேடித் தரும் வாக்குகள். தமிழகத்திற்கென்றில்லாது உலகத்தக்கே பொதுவான விதியது. ஆனாலும் தமிழகத்தில் இந்த வாக்கு வங்கிகளாக இருப்பவை சாதிய அமைப்புக்கள். இந்த விதியினை உடைத்து, தமிழர் எனும் பொதுமையைக் காணவிழையும் சீமானின் முயற்சி புதுமையானதும் வரவேற்கத் தக்கதும். கட்சி கடந்த ஒரு பொதுமையை கண்டடைவது என்பது பேசுவது போல் ஒன்றும் இலகுவானதல்ல. அதற்கு வேண்டிய களமும், காலமும் மிகப் பெரியது.

'என் பின்னால் மூன்று இலட்சம் தம்பிமார் இருக்கிறார்கள் ' என மேடைகளில் சொல்வது புலம் பெயர் தமிழர்களின் புருவங்களை உயர்த்தலாம். ஆனால் தமிழக அரசியலில் மாற்றம் தருவதற்கு,இந்த தொகையின் பத்துமடங்கு திரண்டாற் கூட, அது சொற்பமா கத்தான் இருக்கும். இப்படிச் சொல்வது சீமானால் அப்படியொரு நிலையை எய்துவிட முடியாது எனும் பொருளல்ல. மாறாக இன்னமும் செல்ல வேண்டிய தொலைவின் நீட்சியைச் சுட்டவே.

மேலும் திருமாவளவன் ஈழப்பிரச்சினையை முன்னெடுத்துப் பேசி கட்சி வளர்த்த காலத்தில், தமிழக, மத்திய அரசுகளின் ஈழநிலைப்பாட்டிற்கும் தற்போதுள்ள நிலைப்பாட்டிற்குமான களநிலை நேரெதிரானது. அதுபோலவே ஈழத்தில் அப்போதிருந்த போராட்ட முனைப்புச் சூழ்நிலை முற்றாக மாறி, தேக்கநிலையே காணப்படுகிறது. நீளப் பயனிக்க நினைக்கும் சீமான் நிச்சயம் இந்த நிலைகளைக் கருத்திற் கொள்ள வேண்டும்.

விடுதலைப்புலிகளின் போராட்டம் முடக்கப்பட்டதற்கே, உலக வரைபுகளில் உரைக்கப்பட்ட நியாயம் 'தீவிரவாதம்' என்பதே. அப்படி இருக்கையில், அரசியற' கட்சியாகப் பரிமளிக்கவிரும்பும் சீமான், தனது மேடைப்பேச்சுக்களில் குண்டுகளாய் வெடிப்போம் என்பதும், மாற்று இனம் மீது வஞ்சம் தீர்ப்போம் எனச் சூளுரைப்பதும், அவரை அடக்க நினைப்பவர்களுக்கு அரிய வாய்ப்பாக அமைந்துவிடும். அன்மையில் கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட சம்பவம் அதற்கு நல்ல உதாரணம். அதைவிடவும், வெடிப்போம் அழிப்போம் என்பதனை கட்சிக் கொள்கையாகக் காட்முடியுமா? அல்லது அதையொரு போராட்ட நடைமுறையாகக் கொள்வதானல் கூட, ஈழத்தில் இது இனிச் சாத்தியமில்லை என்றுதானே விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை மெளனித்தார்கள் என்றார்கள். அப்படியிருக்கும் போது அந்த வடிவத்தை உயிர்பிப்பதாகக் கூறுவது நடைமுறைச் சாத்தியமானதா?.

இவ்வாறு சீமான் உரைக்கும் போதேல்லாம், சீமானும் சரி , அந்த உரைக்கு அக மகிழ்ந்து கைதட்டுவோரும் சரி சுலபமாக ஒன்றை மறந்து விடுகின்றார்கள். இத்தகைய உரைகளும், உணர்ச்சி வசப்படுதல்களும், சிங்களத்தால் சிறைப்பட்டுக் கிடக்கும் போராளிகளின் முன் உள்ள சிறைக்கதவுகளில் மேலும் கம்பியினை பொருத்திவிட உதவுகின்றார்கள் என்பதனை.

மேலும் பிரபாகரன் என் தலைவன் எனக் கூறும் சீமான, புரிந்து கொள்ள வேண்டிய மற்றொரு விடயம், 83ல் விடுதலைப்புலிகளின் தாக்குதல்கள் ஆரம்பித்திருந்த போதும், 83க்கு முன்னர் சில ஆண்டுகளும், பின்னர் 85 வரையிலும் தங்கள் செயற்பாடுகளை மிக அமைதியாகவும், இரகசியமாகவும் வைத்திருந்தார்கள் என்பது. ஆக சரியான காலம் வரும் வரையில் பிரபாகரன் விடுதலைப்புலிகளின் சக்தி என்ன என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டியதில்லை.அது ஒரு இரகசிய இயக்கத்திற்குச் சரியான நடைமுறை. ஆனால் அரசியல் இயக்கமாக மலர நினைக்கும் சீமானின் 'நாம் தமிழர்' அப்படி அமைய முடியுமா எனக் கேட்டால், அது அரசியல் இயக்கமாக அங்கீகாரம் பெறும் வரையிலாவது அந்த நடைமுறை அவசியம் என்றே சொல்லலாம்.

தனது அரசியற் பிரவேசத்திற்கு உணர்ச்சிகரமான தனது பேச்சுத் திறனை அடித்தளமாக சீமான் இடுவதில் தவறில்லை. ஆனால் அந்தஅடித்தளத்திலிருந்து கோபுரமாக உயர உரைகள் மட்டும் போதுமானதாக இல்லை. அப்படி அது போதுமென்பது உண்மையானால், திமுகவிலிருந்த போதே தனது சொல்லாற்றலால் பெயர் பெற்ற வை.கோ, அங்கிருந்து விலக்கப்பட்ட பின் , தன்னை தனித்துவமான அரசியல் சக்தியாக நிலைநிறுத்த முடியாது போனது ஏன் என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும். சீமான் தற்போது சொல்லும் பிரபாகரனின் நெருக்கமும், ஈழஆதரவு உரையும் அவரிடமும் அளவுக்கதிமாகவே இருந்தது.

ஈழத்தமிழ் மக்களின் இன்னல்களைத் தெரிவிப்பதோ, அவர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகங்களைக் கூறுவதோ தப்பென்றில்லை. அதே சமயம், தமிழகத்தில் தமிழர்கள் எவ்வாறு அரசியல் ரீதியாக வஞ்சிகப்படுகின்றார்கள் என்பதை விளக்கிச் சொல்வதும், அந்த நிலைகளிலிருந்து மாற்றங்காண அவர்களை அணிதிரட்டுவதும் அரசியல்படுத்துவதும் அவசியமாகிறது. கட்சி அரசியல்வாதிகளின் கயமைத் தனத்தை, ஏழைமக்கள் ஏமாற்றப்படுவதை, விலாவாரியாக விளக்கிச் சொல்லி, கிராமங்களை விழித்தெழச் செய்வது விரைவாக இலக்கினை அடைய உதவும். அதுவே ஆழமான செயற்பாடாவும், அர்ப்பணிப்புடைய செயலாகவும் அமையும்.

வெள்ளந்தியான கிராம மக்கள் மத்தியில் வேசங்கட்டாத மக்கள் பிரதிநிதியாக மாறி, புதிய மாற்றத்தினைக் காணவிழையும் கருத்தியலாளனாக, சிந்தனையாளனாக திகழ்ந்தால் மட்டுமே, தன் பின்னால் அணிதிரளும் மக்கள் கூட்டத்தை, தமிழர்களுக்கான இலக்குவரை அழைத்துச் செல்ல முடியும். அந்த நிலையை அடைய சீமான், சீறும் சிறுத்தையாக இருப்பதைவிட சிந்திக்கும் போராளியாக இருப்பதே சிறந்தது. சிந்திப்பாரா சீமான் ?

நன்றி தமிழ் மீடியா.காம்