Wednesday, December 16, 2009

ஊழல்களின் தேசம் !



நல்ல மனிதர்கள் ஒன்றும் செய்யாமல் இருப்பதே தீவினையின் வெற்றிக்கு முக்கிய காரணம்.

Edmond Burke


1993 மும்பை குண்டு வெடிப்பின் போது

இன்று இந்தியாவில் ஊழல் ஒரு மிகச் சாதாரணமான ஒரு விஷயமாகிப் போய் விட்டது. ஊழலைப் பொறுத்தவரை நமக்கு மிக அதிகமான சகிப்புத் தன்மை வளர்ந்து, ஊழலை ஒரு பொருட்டாகவே நாம் கருதாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.

ஊழல் என்ன அவ்வளவு பெரிய விஷயமா ? எல்லோரும்தான் ஊழல் செய்கிறார்கள், யார்தான் ஊழல் செய்யவில்லை என்று கேட்பீர்கள்.


1993ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பை மறந்திருக்க மாட்டீர்கள்.

250 பேர் இறந்தார்கள். 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தார்கள். இந்த சதிச்செயலில் 1500 கிலோவுக்கும் மேற்பட்ட ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து பயன்படுத்தப் பட்டது.

1993 பிப்ரவரி 2 மற்றும் 8 தேதிகளில் 1500 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து, இந்திய கடல் வழியாக சட்ட விரோதமாக வருவதற்கு காரணம் யார் தெரியுமா ?

மும்பை மாநகரத்தின் கூடுதல் கஸ்டம்ஸ் கலெக்டராக இருந்த சோம்நாத் தாப்பா.

மும்பை ஸ்ரீவர்தன் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் விஜய் கிருஷ்ண பாட்டீல் கோந்கா செக்போஸ்டில், ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து வைக்கப் பட்டிருந்த வண்டியை இடை மறித்து, பணம் பெற்றுக் கொண்டபின் மும்பை செல்ல அனுமதித்தவர்.

அடுத்து கஸ்டம்ஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவந்த் கவுரவ். இவர், வெடிப்பொருள் இருந்த வண்டியை, மும்பை நகருக்குள் வரும் வரை பாதுகாப்புக்காக தன்னுடைய காரில், வந்து விட்டுச் சென்றவர்.


இந்த அரசு அதிகாரிகள், லஞ்சம் வாங்காமல் தங்களுடைய கடமையைச் செய்திருந்தால் 250 அப்பாவி மக்கள் இறந்திருக்க மாட்டார்கள். 700 அப்பாவிகள் படுகாயமடைந்திருக்க மாட்டார்கள்.



சுதந்திர இந்தியாவில், ஊழலை இப்போதும், அப்போதும், தாலாட்டி சீராட்டி வளர்த்தெடுத்து, இன்று ஆலமரமாய் வளர்ந்து நிற்பதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான்.



காங்கிரஸ் கட்சியை எதிர்த்து தொடங்கப் பட்ட கட்சிகள் அனைத்தும், இன்று காங்கிரஸ் அரவணைப்பில் இருப்பதற்கு காரணமும், காங்கிரஸ் கட்சியின் ஊழல் கலாச்சாரம்தான்.

நகைச்சுவையாக ஒரு கதை சொல்வார்கள். நேரு பிரதமராக இருந்த காலத்தில், கட்சிக்காக எவ்வளவு பணம் வாங்கப் படுகிறது என்பதே நேருவுக்கு தெரியாது. இந்திரா காலத்தில், இந்திரா பெட்டிகளை எண்ண ஆரம்பித்தார். ராஜீவ் காலத்தில் சில்லரைகளையும் எண்ண ஆரம்பித்தார் என்று காங்கிரஸ் கட்சியின் மதிப்பீடுகளின் வீழ்ச்சியை குறிப்பிடுவார்கள்.



1993 வி.கே.கிருஷ்ண மேனன்.


சுதந்திர இந்தியா சந்தித்த முதல் ஊழல் நேருவின் நம்பிக்கைக்கு பாத்திரமான நெருங்கிய நண்பரும், அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்த வி.கே.கிருஷ்ண மேனன் சம்பந்தப் பட்டது.

1948ம் ஆண்டில் இங்கிலாந்துக்கான இந்திய தூதராக கிருஷ்ண மேனன் இருந்தார். அப்போது, பாகிஸ்தானுடன் போர் துவங்கிய நிலையில, லண்டனைச் சேர்ந்த சந்தேகத்திற்குரிய ஒரு நிறுவனத்திடமிருந்து 2000 ஜீப்புகள் வாங்க பரிந்துரை செய்தார். அந்நிறுவனத்திற்கு, ஏறக்குறைய மொத்த பணமும் முன்பணமாகவே வழங்கப் பட்டது.

2000 ஜீப்புகளுக்கு பதிலாக வெறும் 155 ஜீப்புகள் மட்டுமே, அவையும் தரம் குறைந்ததாக வந்து சேர்ந்தது. இது பற்றி பத்திரிக்கைகளில் பெரிய அளவில் செய்திகள் வந்தும், நேரு கிருஷ்ண மேனனை பாதுகாப்புத் துறை அமைச்சராக்கினார். இந்த ஊழலில் மொத்த மதிப்பு ரூபாய் 80 லட்சம்.


1949ல் ராவ் சிவ பகதூர் சிங் என்பவர், ஒரு வைரச் சுரங்க உரிமத்தை புதுப்பித்து தருவதற்காக சச்சேந்திர பாரன் என்ற வைர வியாபாரியிடம் ரூ.25,000 லஞ்சம் பெற்றதற்காக 3 ஆண்டுகள் சிறையில் இருந்தார். இந்த ராவ் சிவ பகதூர் சிங் யார் தெரியுமா ? மத்திய பிரதேசத்தின் முதலமைச்சராகவும், முன்னாள் மத்திய அமைச்சராகவும் இருந்த அர்ஜுன் சிங்கின் தந்தை.


அடுத்த ஊழல், 1951ம் ஆண்டில், மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை செயலாளராக இருந்த எஸ்.ஏ.வெங்கட்ராமன் சம்பந்தப் பட்டது. ஒரே நிறுவனத்துக்கு சைக்கிளின் உதிரி பாகங்கள் அனைத்தையும் இறக்குமதி செய்ய ஆணையிட்டதில் ஊழல் நிரூபிக்கப் பட்டு, வெங்கட்ராமன் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார்.


அடுத்த ஊழல் 1958ம் ஆண்டு, வெளி வந்த “முந்த்ரா ஊழல்“ என்று அழைக்கப் பட்ட ஊழல் தான். இந்த ஊழலை வெளிக் கொண்டு வந்தது யார் தெரியுமா ?

நேருவின் மருமகனும், இந்திராவின் கணவருமான பெரோஸ் காந்தி.



1993 பெரோஸ் காந்தி


1957ம் ஆண்டு, கொல்கத்தாவைச் சேர்ந்த ஹரிதாஸ் முந்த்ரா என்பவர்தான் இந்த ஊழலுக்கு வித்து. கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர்தான் ஹரிதாஸ் முந்த்ரா. இவர் பங்குச் சந்தையிலும் ஹர்ஷத் மேத்தாவுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.

இவரது 6 தொழில் நிறுவனங்களின் பங்குகள், பங்குச் சந்தையில் அசுர வீழ்ச்சி அடைந்ததனால் இந்நிறுவனங்களின் பங்குகளை மத்திய அரசு நிறுவனமான எல்.ஐ.சி யை வாங்க வைத்தார். எல்ஐசியும், அப்போதைய நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியின் ஆலோசனையின் பேரில், 1.25 கோடிக்கு, முந்த்ராவின் ஆறு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியது.

ஆனால், வாங்கிய பங்குகள் அனைத்தும், விலை வீழ்ச்சியடைந்து, எல்ஐசியின் மொத்த முதலீடும் காணாமல் போனது. இது தொடர்பாக, பெரோஸ் காந்தி பாராளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் 1958ம் ஆண்டு கேட்ட கேள்வி, இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியது.

இது தொடர்பாக சொல்லப் படும் ஒரு நகைச்சுவை கதை சுவையானது.

நேருவின் மருமகன் ஆனதால், நிதி அமைச்சல் டிடிகே, பெரோஸ் காந்தியை நேரு குடும்பத்தின் செல்ல நாய் என்று கூறுவது வழக்கம்.


முந்த்ரா ஊழல் தொடர்பாக தனது பேச்சை தொடங்கிய பெரோஸ் காந்தி “நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி என்னை நேரு குடும்பத்தின் வளர்ப்பு நாய் என்று கூறுகிறார். அவர் தன்னை பாராளுமன்றத்தின் தூண்களில் ஒருவர் என்று கூறிக்கொள்கிறார். ஒரு நாய், தூணைப் பார்த்தால் என்ன செய்யுமோ அதை நான் இப்போது செய்யப் போகிறேன்” என்று கூறிவிட்டு பேச்சைத் தொடங்கினார் என்று கூறுவார்கள்.


பெரோஸ் காந்தியின் குற்றச் சாட்டைத் தொடர்ந்து, நாடெங்கும் பெரும் அமளி கிளம்ப, நேரு, நீதிபதி சாக்லா என்பவர் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார். நீதிபதி சாக்லா தனது அறிக்கையை சமர்ப்பிக்க எடுத்துக் கொண்ட கால அவகாசம் என்ன தெரியுமா ? 24 நாட்கள்.

நீதிபதி லிபரான் தனது அறிக்கையை சமர்ப்பிக்க எடுத்துக் கொண்ட 18 ஆண்டுகளை ஒப்பிட்டுப் பாருங்கள்.

நீதிபதி சாக்லா தனது அறிக்கையில் இந்த ஊழலுக்கு அப்போதைய நிதித் துறை செயலர் ஹரிபாய் படேல், மற்றும் இரண்டு எல்ஐசி அதிகாரிகளே இந்த ஊழலுக்கு காரணம், அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தார்.

நிதி அமைச்சர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி நிதித் துறைச் செயலரின் நடவடிக்கைகளுக்கு, நிதி அமைச்சர் என்ற வகையில் கிருஷ்ணமாச்சாரியும் பொறுப்பு என்று கூறினார். கிருஷ்ணமாச்சாரி பதவி விலகினார்.

இதற்கு அடுத்த பெரிய ஊழல் 1958ம் ஆண்டில், இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா குழுமத்தின் முதலாளி ராமகிருஷ்ண டால்மியாவை பற்றியது. ராமகிருஷ்ண டால்மியா தன்னுடைய காப்பீட்டு நிறுவனமான பாரத் இன்ஷுரன்ஸ் நிறுவனத்திலிருந்து, 2.5 கோடியை கையாடல் செய்தார்.


1962ம் ஆண்டு தேஜா கேப்பர் ஊழல் என்று அழைக்கப் படும் ஊழல். ஜெயந்தி தர்மா தேஜா என்பவர், ரூபாய் 200 முதலீட்டில் ஒரு கப்பல் நிறுவனத்தை துவங்கினார். இந்நிறுவனத்திற்கு அரசிடமிருந்து 200 கோடியை கடனாகப் பெற்றார்.

இந்நிறுவனத்தில் முதலீடு செய்த பங்குதாரர்களின் பணம் அனைத்தும், ஜெயந்தி தர்மா தேஜாவின் சொந்த வங்கிக் கணக்கில் முதலீடு செய்யப் பட்டது. 1970ல் லண்டனில் கைதான தேஜா, காவலில் இருந்து தப்பிச் சென்றார். இன்று வரை அவர் எங்கிருக்கிறார் என்ற விபரம் இல்லை.

1962ம் ஆண்டு, பஞ்சாப் முதல்வராக இருந்த பிரதாப் சிங் கேரோன் மீது அதிகார துஷ்பிரயோக குற்றச் சாட்டு எழுந்தது. இது பற்றி விசாரிக்க, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தாஸ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டது.

நீதிபதி தாஸ் தனது அறிக்கையில், ஒரு தந்தை, தனது மகன்கள் செய்யும் எல்லா காரியங்களுக்கும் பொறுப்பாக முடியாது என்றாலும் முதலமைச்சராக இருப்பவருக்கு தனது மகன்களின் செயல்களுக்கு தார்மீக பொறுப்பு உள்ளது என்று அறிக்கை அளித்தார். இதை ஏற்ற பிரதாப் சிங் கேரோன், உடனடியாக பதவி விலகினார்.


அடுத்த ஊழல், 1971ம் ஆண்டில் நகர்வாலா ஊழல் என்று பிரபலமாக அழைக்கப் பட்ட ஊழல். 1971ம் ஆண்டு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் பாராளுமன்ற தெரு கிளையின் தலைமை காசாளர் வேத பிரகாஷ் மல்ஹோத்ராவுக்கு இந்திரா காந்தியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் 60 லட்சம் ரூபாயை எடுத்து, பங்களாதேஷை சேர்ந்த ஒரு நபருக்கு அளித்தார்.

பின்னர், விசாரணையில் இந்திய உளவுப் பிரிவைச் சேர்ந்த ரஸ்தம் சோரப் நகர்வாலா என்பர்தான் இந்திராவின் குரலில் பேசினார் என்று கண்டிறியப்பட்டது. கைது செய்யப் பட்ட நகர்வாலா, சந்தேகத்திற்குரிய முறையில் 1973ம் ஆண்டு, சிறையிலேயே இறந்தார்.

இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி காஷ்யப் மர்மமான முறையில் ஒரு கார் விபத்தில் உயிரிழந்தார்.


1976ம் ஆண்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஹாங்காங்கைச் சேர்ந்த, இல்லாத ஒரு நிறுவனத்திடம் செய்து கொண்ட ஒரு ஒப்பந்தத்தின் விளைவாக ஏற்பட்ட நஷ்டம் 2.2 கோடி.


1981ல் மகாராஷ்டிராவின் அப்போதைய முதல்வர் பிசினெஸ் நிறுவனங்களிடமிருந்து பெற்ற பணத்தை, தனக்கு சொந்தமான ஒரு தனியார் ட்ரஸ்டில் டெபாசிட் செய்த தொகை 30 கோடி.


1987ல் ஜெர்மனியைச் சேர்ந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கும் நிறுவனம், கப்பல் விற்பதற்காக இந்திய அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சப் பணம் 20 கோடி.


1982ம் ஆண்டு மத்திய பிரதேச முதலமைச்சராக இருந்த அர்ஜுன் சிங், சுர்ஹத் குழந்தைகள் கூட்டுறவு சங்கத்தின் மூலம் லாட்டரி டிக்கட்டில் 5.4 கோடி ஊழல் புரிந்தார் என்று குற்றச் சாட்டு எழுந்தது. ஆனால், இந்த குற்றச் சாட்டு நிரூபிக்கப் படவேயில்லை.


இதற்குப் பிறகு, இந்தியாவை உலுக்கி, ஆட்சி மாற்றத்திற்கு காரணமாக இருந்த மிகப் பெரும் ஊழல் போபர்ஸ் ஊழல்.


1987 ஏப்ரல் 16ல், சுவீடன் வானொலி போபர்ஸ் பீரங்கி வாங்கியதில் இந்தியாவின் அரசியல்வாதிகளுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் பெரிய அளவில் லஞ்சம் கொடுத்து இந்த போபர்ஸ் பீரங்கி வாங்கப் பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து, இந்தியாவில் பெரும் புயல் கிளம்பியது.


இந்த பேரத்தில் லஞ்சமாக 139 கோடி ரூபாய்கள் ராஜீவ் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான ஒட்டாவியோ கொட்டரோக்கியின் சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நார்ட்பினான்ஸ் வங்கியின் 18051-53 என்ற கணக்கில் போடப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த ஊழல் வெளியானதால், ஆட்சியை இழந்த ராஜீவ், கடைசி வரை இந்த புகாரை மறுத்து வந்தார். கடும் போராட்டத்துக்கு பிறகு வி.பி.சிங் பிரதமாரான பிறகு, சிபிஐ, இவ்வழக்கில் விசாரணையை துவக்கியது. பல ஆண்டுகள் கடந்தும், இவ்வழக்கில் ஒருவருமே தண்டிக்கப் படவில்லை.


காங்கிரஸ் 2004ல் பதவியேற்றதும், முடக்கி வைக்கப் பட்டிருந்து கொட்டரோக்கியின் வங்கிக் கணக்குகள், ரிலீஸ் செய்யப் பட்டன. பத்திரிக்கைகளில் இச்செய்தி வெளியாகி, பரபரப்பாவதற்குள், கொட்டரோக்கி, மொத்த பணத்தையும், வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து விட்டார்.

இன்று, காங்கிரஸ் அரசாங்கம், இந்த வழக்கை மொத்தமாக மூட, அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.


1990ல் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் போயிங் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்யாமல், ஏர் பஸ் நிறுவனத்தோடு செய்த ஒப்பந்தத்தால் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு ஒரு வாரத்திற்கு ஏற்பட்ட நஷ்டம் 2.5 கோடி.


இதற்குப் பிறகு இந்தியாவை உலுக்கிய மிகப் பெரிய ஊழல் 1992ம் ஆண்டு ஹர்ஷத் மேத்தா ஊழல். ஹர்ஷத் மேத்தாவின் பங்குச் சந்தை ஊழலின் மொத்த ஊழல் தொகை 5000 கோடிக்கும் மேல்.



ஹர்ஷத் மேத்தா


இந்திய பங்குச்சந்தையில் நாட்டுடைமையாக்கப் பட்ட வங்கிகளின் பணத்தை வைத்து, பல பங்குகளின் விலையை ஏற்றவும் இறக்கவும் செய்த ஹர்ஷத் மேத்தா ஊழல் வெளி வந்ததும், பங்குச் சந்தை கடும் வீழ்ச்சியைக் கண்டது. ஹர்ஷத் மேத்தா, அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவுக்கு 1 கோடி ரூபாயை லஞ்சமாக கொடுத்ததாக திடுக்கிடும் புகாரைக் கூறினார்.

இந்த பங்குச் சந்தை ஹர்ஷத் மேத்தா ஊழல் தொடர்பாக விசாரிக்க கூட்டுப் பாராளுமன்றக் குழு அமைக்கப் பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையில் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் எஸ்.வெங்கட்ராமன், துணை கவர்னர்கள் அமிதவ் கோஷ் மற்றும் ஆர்.ஜானகிராமனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப் படவேண்டும் என்று பரிந்துரை அளித்தது.

மேலும், மத்திய அமைச்சர்கள் ராமேஷ்வர் தாகூர், சங்கரானந்த், மாதவராவ் சிந்தியா, மன்மோகன் சிங் ஆகியோர் மீது கடுமையான விமர்சனங்களையும் வைத்திருந்தது. ஆனால், நரசிம்ம ராவ், இந்த பரிந்துரையின் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.


1993 முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ்


அடுத்து 1994ம் ஆண்டின் சர்கரை இறக்குமதி ஊழல். மார்க்கெட்டில், சர்க்கரை தட்டுப்பாடு ஏற்பட்டு, சர்க்கரை விலை உயர்ந்ததையடுத்து, க்யான் பிரகாஷ் விசாரணை கமிஷன் அமைக்கப் பட்டது.

இக்கமிஷன், சந்தையில் சர்க்கரை கிடைக்காமல் தட்டுப்பாட்டை ஏற்பட காரணம், மத்திய அமைச்சர் கல்பனாத் ராய்தான், சர்க்கரை ஆலைகளுக்கு விலையேற்றம் காரணமாக லாபம் ஏற்பட வேண்டும் என்ற நோக்கில், கல்பனாத் ராய், இவ்வாறு செயல்பட்டுள்ளார் என்று பரிந்துரை செய்யப் பட்டது.

இந்த அறிக்கையின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், கிடப்பில் போட்டார் நரசிம்ம ராவ்.
தொண்ணூறுகள் தொடங்கி, ஊழல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.


1995ல் யுகோஸ்லாவியா தினார் ஊழல், மேகாலயா வன ஊழல்,

1996ல் உர இறக்குமதி ஊழல், .யூரியா இறக்குமதி ஊழல், பீகார் மாட்டுத் தீவன ஊழல்,

1997ல் சுக்ராம் ஊழல், லவ்லீன் திட்ட ஊழல், பீகார் நில பேர ஊழல், பன்சாலி பங்கு வர்த்தக ஊழல்,

1998ல் தேக்கு மரக்கன்று ஊழல்,

2001ல் யுடிஐ ஊழல், தினேஷ் டால்மியா பங்கு வர்த்தக ஊழல், கேத்தன் பரேக் பங்கு வர்ததக ஊழல்,

2002ல் சஞ்சய் அகர்வாலின் வீட்டு வர்த்தக ஊழல்,

2003ல் போலி முத்திரைத் தாள் ஊழல்,

2005ல் பங்கு வர்த்தக ஐபிஓ ஊழல், பீகார் வெள்ள நிவாரண ஊழல், ஸ்கார்ப்பீன் நீர்மூழ்கி கப்பல் ஊழல்,

2006ல் பஞ்சாப் சிட்டி சென்டர் ஊழல், உத்தரப் பிரதேசத்தில் தாஜ் காரிடார் ஊழல்,

2008ல் பூனேவைச் சேர்ந்த ஹசன் அலி கான் வருமான வரி ஏய்ப்பு, சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்ட்டிரா ஊழல், ஸ்விஸ் வங்கிகளில் இந்தியக் கருப்புப் பணம், ஜார்க்கண்ட் மருத்துவ உபகரணங்கள் ஊழல், அரிசி ஏற்றுமதி ஊழல், ஒரிஸ்ஸா சுரங்க ஊழல் மற்றும் இறுதியாக மது கோடாவின் ஊழல் என ஊழல்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.



இந்த ஊழல் வழக்கில் தண்டிக்கப் பட்டவர்கள் என்று எடுத்தால், 1 சதவிகிதத்திற்கும் கீழே. இருப்பார்கள்.

இந்த ஊழல் பட்டியலில் ஆட்சிக்கு நெருக்கடி ஏற்படும் போது, எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் விலை கொடுத்து வாங்கப் படுவது சேர்க்கப் படவில்லை.

கடந்த மன்மோகன் சிங் ஆட்சியின் போது, ஒரு எம்பியின் விலை 25 கோடி என்று பத்திரிக்கைகளில் செய்தி வந்தது. தற்போது, எடியூரப்பா அரசாங்கத்தை காப்பாற்றவும், ஒரு எம்எல்ஏவின் விலை 25 கோடிக்கும் மேல் என்று தகவல்கள் வந்துள்ளன.


சுதந்திர இந்தியா சந்தித்துள்ள ஊழல்களின் மொத்த மதிப்பு 80 லட்சம் கோடியைத் தாண்டுகிறது.


இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழே, அதாவது மாதம் ரூபாய் 300க்கும் கீழே சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 30 கோடி. இந்தப் புள்ளி விபரம், இந்திய அரசின் கணக்கு. யதார்த்த நிலை இன்னும் மோசமாகவே இருக்கும்.


இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்ட நபர்கள், கட்சி வித்தியாசங்களை கடந்து அனைத்து கட்சிகளிலும் உள்ளனர். தேர்தலை சந்திக்கவும், கட்சித் தாவும் எம்எல்ஏ எம்பிக்களை விலைக்கு வாங்கவும், கருப்புப் பணம் பயன்படுவதால், ஊழலில் ஊறித் திளைக்க அரசியல் கட்சிகள் அஞ்சுவதே இல்லை.

சரி மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறதா ?

பெருமளவில் மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறது.

எந்த அளவுக்கு மாற்றம் என்றால், தேர்தல் வந்தால், பணம் பெற்றுக் கொண்டு வாக்களிக்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.



இலவச டிவி கொடுத்தால், முண்டி அடித்துக் கொண்டு, வாங்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.



1993 கே.கே.நகரில் வெள்ள நிவாரணம் வழங்கும் போது நெரிசலில் சிக்கி தன் உறவினரை இழந்தவர்கள் கதறி அழுகின்றனர்


வெள்ள நிவாரணத் தொகை வழங்கினால் நள்ளிரவில் ஒருவரை ஒருவர் ஏறி மிதித்து, 42 பேரை கொன்று, 2000 ரூபாய் பெரும் அளவுக்கு மாறி இருக்கிறது.

ஹெல்மெட் கட்டாயம் போட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், ட்ராபிக் போலீஸ் காரருக்கு லஞ்சம் கொடுத்தாவது, ஹெல்மெட் போடுவதில்லை என்று பிடிவாதம் பிடிக்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.



டிஎன்பிஎஸ்சி தேர்வு வந்தால், யாரைப் பிடித்தாவது, லஞ்சம் கொடுத்து, அரசு வேலை வாங்கும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.

அடுத்தவன் குடியைக் கெடுத்தாவது தானும் தன் குடும்பமும் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் எனும் அளவுக்கு மாற்றம் வந்திருக்கிறது.

பேய்கள் அரசு செய்தால் பிணந்திண்ணும் சாத்திரங்கள் என்றான் பாரதி. சாத்திரங்கள் பிணந்தான் தின்று கொண்டிருக்கின்றன.

0 comments: