Sunday, June 22, 2008

Kapil the Great!



இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்... டர்ன்பிரிட்ஜ் வெல்ஸ் என்ற சிறு நகரத்தை யாரும் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை. இங்கிலாந்தின் கென்ட் நகருக்கு அருகே உள்ள அந்த கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத பகுதியை, லண்டன்வாசிகள் வார விடுமுறைகளைக் கழிக்கும் ஓய்விடமாகப் பயன்படுத்திவந்தனர்.

1983ம் ஆண்டு அந்த சின்ன நகரை கிரிக்கெட் சரித்திரத்தில் மறக்கமுடியாத ஒரு மாநகரமாக மாற்றினார் ஒரு மாவீரர்.

அவர்தான் கபில்தேவ் நிகாஞ்ச்.

புரூடென்ஷியல் உலகக் கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்த ஒரே இந்திய கேப்டன். 300 ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத மாபெரும் சாதனைக்குச் சொந்தக்காரர் கபில்தேவ்.

1983, ஜூன்-18-ம் நாள் இந்திய அணியின் சரித்திரத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அணிப் பற்று, மன உறுதி, ஆர்வம், கடின முயற்சி என நல்ல வார்த்தைகள் அனைத்துக்கும் இலக்கணம் வகுத்த பொன்னாள் அது.

இந்திய - ஜிம்பாப்வே அணிகள் மோதும் அந்தப் போட்டியின் வெற்றிதான், அரை இறுதிப் போட்டிக்கான தகுதியை நிர்ணயிக்கும் என்ற நிலையில் இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்துக் களமிறங்கியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் முதல் விக்கெட்டைப் பறிகொடுத்து இந்திய அணி. 9 ரன்கள் சேர்ப்பதற்குள் அடுத்தடுத்து 4 வீரர்கள் பெவிலியன் திரும்பினர். அப்போதுதான் பெவிலியனைத் திரும்பிப் பார்த்தபடி 6-வது பேட்ஸ்மேனாக மைதானத்துக்குள் நுழைகிறார் கபில். மேலும் 8 ரன்கள் சேர்வதற்குள் 5வது விக்கெட் விழ, அவ்வளவுதான் இந்திய அணியின் கதை முடிந்தது என்று சக வீரர்கள் சோகத்துடன் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு நின்றிருந்தனர்.

'ஹரியானா ஹரிக்கேன்' கபில் மட்டும் பயப்படவில்லை. அசரவில்லை. ஜிம்பாப்வே பந்துகளைப் பார்த்து திகைக்கவுமில்லை. தன் பாணியில் வெளுத்துக் கட்டினார். இத்தனைக்கும் அந்தப் பிட்சில் வேகப் பந்துகள் அநியாயத்துக்குப் பவுன்ஸ் ஆகி எப்போது வேண்டுமானாலும் ஸ்டம்புகளைப் பதம் பார்க்கும் ஆபத்து வேறு.

ஆனால் வெறும் 24 வயது நிரம்பிய கபிலின் தேர்ந்த ஆட்டம் ஜிம்பாப்வே பந்துகளைச் சிதைத்தது. வெறும் 80 பந்துகளில் சதமடித்தவர், மேலும் 58 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். 138 பந்துகளில் கடைசிவரை அவுட்டாகமால் அவர் எடுத்த ரன்கள் 175. இதில் 24 பவுண்டரிகள், 6 சிக்ஸர்களை விளாசியிருந்தார் கபில். இன்றைக்கு ஆடுகிறார்களே 20 ஓவர் கிரிக்கெட், அதை அன்றைக்கே விளையாடி விட்டவர் கபில்.

பெவிலியனில் நின்று கொண்டிருந்த இதர இந்திய வீரர்களின் முகங்களில் ஈயாடவில்லை. நின்ற இடத்திலிருந்து கொஞ்சமும் அசையாமல் அப்படியே சிலை மாதிரி நின்று கொண்டிருந்தனர். கபிலுக்கு எதிர்முனையில் கடைசிவரை அவருக்கு கம்பெனி கொடுத்து ஆடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டவர் விக்கெட் கீப்பர் சையத் கிர்மானி (24).

60 ஓவர்களில் 266 ரன்களைக் குவித்தது இந்திய அணி, கபில் தயவில். பின்னியும் (22) மதன்லாலும் (17) கபிலுக்கு பெரும் பலமாக நின்றனர் அந்த இன்னிங்ஸில்.

'கபில் எங்களிடம் சொன்னது ஒரே விஷயம்தான். நேராக வரும் பந்துகளைத் தடுத்து ஆடுங்கள். ஒரே ஒரு ரன் எடுத்து எனக்கு கார்ட் கொடுங்கள். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். நானும், பின்னியும், மதனும் செய்தது அந்த ஒரு வேலையைத்தான். மற்ற எல்லாம் கபில் செய்த மாயாஜாலம்...' என்கிறார் மலரும் நினைவுகளில் மூழ்கிப் போய் கண்கலங்கும் கிர்மானி.

ஜிம்பாப்வே ஆட்டத்தைத் துவங்கியது. ஒரு முனையில் கபில், மறுமுனையில் மேஜிக் பந்து வீச்சாளர் ரோஜர் பின்னி... அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி விட்டனர். ஜிம்பாப்வே வீரர்கள் அடித்து ஆடத் தொடங்கியபோது, மதன் லாலையும், பல்வீந்தர் சிங் சாந்துவையும் மீடியம் பேஸ் போட வைத்தார் கபில். அடுத்த மூன்று விக்கெட்டுகள் காலி. ஸ்லோ மீடியம் பேஸர் அமர்நாத் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இடையில் இரண்டு ரன் அவுட்கள்.

'கபில்ஸ் டெவில்ஸ்' வெற்றிக் கனியை 31 ரன்கள் வித்தியாசத்தில் ருசித்தனர்.

அந்த ஒரே நாளில் இங்கிலாந்து மொத்தமும் பரபரத்துவிட்டது. உலகெங்கும் கபிலின் சாதனை பற்றித்தான் பேச்சு. துரதிருஷ்டவாசமாக, அன்றைக்கு பிபிசி ஊழியர்கள் ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டிருந்ததால் அந்தப் போட்டியை ஒளிபரப்ப முடியவில்லை. வெறும் ரேடியோ கமெண்டரி, பத்திரிகையாளர்கள் எடுத்த புகைப்படங்கள் மட்டும்தான்.

அடுத்து வந்த அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை (அப்பெல்லாம் கிரிக்கெட்டின் 'தாதா'வாக ஆஸ்திரேலியா வளர்ந்திருக்கவில்லை) புரட்டி எடுத்து 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கபில் அணி. அதில் ரோஜர் பின்னியும், மதன்லாலும் அதிஅற்புதமாக பந்து வீசி 7 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ரிச்சர்ட்ஸின் புகழாரம்

இறுதிப்போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை இந்திய அணி வெற்றி கொண்ட கதையை யாரும் மறந்திருக்க முடியாது.

மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ் சொல்கிறார்: அந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றிப் பயணத்தைத் தடுத்தது கபில்தேவ்தான். அந்த ஒரு காட்சை (ரிச்சர்ட்ஸ் அடித்த பந்து) மட்டும் அவர் விட்டிருந்தால் 1983 கோப்பை எங்களுக்குத்தான். எங்கிருந்து ஓடிவந்தார், எப்படி அந்தக் கேட்சைப் பிடித்தார் என்று இப்போதும் எனக்குப் புரியவில்லை. ஒரு கேப்டனாக சக வீரர்களை அவர் வழி நடத்திச் செல்லும் விதம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

ரோஜர் பின்னி, மதன்லால், அமர்நாத், சாந்து என அன்றைக்கு அவருடனிருந்த எல்லா வீரர்களிடமும் நான் கபிலைத்தான் பார்த்தேன். கபில் என்ற ஹீரோவுக்கு பெரிதும் துணை நின்றவர்கள் இந்த நால்வரும்தான். சொல்லப்போனால் பந்து வீச்சாளர்கள் சேர்ந்து பறித்த வெற்றிக் கனி 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை... இப்போது சொல்கிறேன்.

இந்தியாவிடம் தோற்றுப் போனோமே என பல ஆண்டுகள் வரை நான் மனம் வருந்தியிருக்கிறேன். ஆனால் கபில் போன்ற ஒரு ஜீனியஸ் தலைமையில் விளையாடிய ஒரு திறமையான அணியிடம் தோற்றதில் எந்த வெட்கமும் இல்லை எங்களுக்கு. சர் என்ற உயரிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட வேண்டிய மாவீரர்தான் கபில்...'

கேவலப்படுத்தும் கிரிக்கெட் வாரியம்!

ஆனால் அந்த மாவீரரை கௌரவப்படுத்துவதற்குப் பதில் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறது இந்திய கிரிக்கெட் வாரியம். கிரிக்கெட்டில் கபில் செய்த மாபெரும் சாதனைகளுக்காக பிரிட்டிஷ் அரசு கபிலுக்கு சர் பட்டம் வழங்க யோசித்துக் கொண்டிருக்கும் இத் தருணத்தில், அவரை இந்தியக் கிரிக்கெட்டிலிருந்தே ஒதுக்கி வைத்தும், மொகாலி மைதானத்திலிருந்த அவரது படங்களைக் கிழித்தும் தன்னைத் தாழ்த்திக் கொண்டிருக்கிறது கிரிக்கெட் வாரியம்.

இந்த 35 ஆண்டுகளில் இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று பெருமை சேர்த்த ஒரே கேப்டன் கபில் மட்டுமே. காரணம் அவரது அணிப்பற்றும் அயராத உழைப்பும். அவரது சாதனைக்கு இன்று வெள்ளி விழா.

இனியும் காலம் தாழ்த்தாது ஒரு கண்ணியவான உரிய முறையில் கவுரப்படுத்த கிரிக்கெட் வாரியம் முன் வரவேண்டும். அதுதான் இந்திய கிரிக்கெட்டுக்கே கவுரவம்!

1 comments:

வனம் said...

வணக்கம்

நீங்கள் சொல்வது மிக சரியான கருத்து