நாட்டில் உள்ள பள்ளிக் குழந்தைகளில் 55 சதவிகிதம் பேர் முதுகுவலியால் அவதிப்படுவதாக அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இன்றைக்குப் படிப்பு என்ற விஷயம் மிகவும் காஸ்ட்லியானது மட்டுமல்ல, சுமை மிகுந்ததாகவும் மாறி வருகிறது.
குறிப்பாக மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் அதிக அளவு புத்தகச் சுமையைச் சுமக்க வேண்டியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவனமான வெல்எட், தமிழகத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 தனியார் பள்ளிக் கூடங்களைச் சேர்ந்த குழந்தைகளிடம் மேற்கொண்ட ஆய்வின்படி, ஒரு எல்கேஜி குழந்தை தன் சராசரி உடல் எடையான 16 கிலோவில் பாதிக்கு மேல் எடைகொண்ட புத்தகங்களைச் சுமக்கிறதாம். அதாவது 16 கிலோ எடை கொண்ட குழந்தை சுமக்கும் புத்தகச் சுமையின் அளவு 8 கிலோவுக்கும் அதிகமாம்!
அதேபோல 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன் அல்லது சிறுமி சராசரியாக தங்களது லஞ்ச் பேக்கையும் சேர்த்து சுமார் 25 கிலோ எடை அளவுக்கு சுமைகளைச் சுமக்க வேண்டியுள்ளதாம்.
இதன் காரணமாக குழந்தைகள் இளம் வயதிலேயே உடலில் சமநிலையை இழந்து, படிப்பில் கோட்டை விடும் நிலை ஏற்படுவதாக இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இளம் மாணவ மாணவிகள் 5 வயதிலிருந்தே முதுகு வலிக்கு ஆளாவதாகவும் தெரிய வந்துள்ளது.
தனியார் பள்ளிகளில் பயிலும் 5 வயது முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளில் 55 சதவிகிதம் பேர் முதுகுவலி, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்றவற்றால் அவதிக்குள்ளாகின்றனர். அதிகாலையிலேயே பள்ளிக்குச் செல்வது, மாலையில் விளையாடக் கூட நேரமின்றி ட்யூஷன் படிப்பது போன்ற காரணங்களால் சரிவர சாப்பிட முடியாமல் இத்தகைய நிலைக்கு குழந்தைகள் தள்ளப்படுகிறார்கள் என இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அரசு பள்ளிகளிலும்...
முன்பெல்லாம் அரசுப் பள்ளிகளில் இந்த நிலை அவ்வளவாக இல்லாமல் இருந்தது. காரணம் அந்தப் பள்ளிகளில் எல்.கே.ஜி. போன்ற ஆரம்ப நிலை வகுப்புகள் கிடையாது. ஆனால் இப்போது நகரம் சார்ந்த பல அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளைப் போலவே கிண்டர் கார்டன் வகுப்புகளையும் நடத்தத் தொடங்கியிருப்பதால் அங்கும் 30 சதவிகித குழந்தைகள் இத்தகைய பாதிப்புகளுக்கு ஆளாவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
கான்பூரைச் சேர்ந்த மற்றொரு நிறுவனமான ஜாயின் கேர் கிளப் நடத்திய ஒரு ஆய்வில் அரசுப் பள்ளிகளில் 30 சதவிகிதம் குழந்தைகளும், தனியார் பள்ளிகளில் 63 சதவிகிதம் குழந்தைகளும் முதுகு வலி, மந்த நிலை, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து, பிரபல குழந்தை நல சிறப்பு மருத்துவர் டாக்டர் சந்திரசேகரன் கூறியதாவது:
நான் அரசுப் பள்ளியில் முதல் வகுப்பிலிருந்துதான் படித்தேன். எனக்கு படிப்பு எப்போதும் சுமையாய் தெரிந்ததில்லை. என் தாய் தந்தையர் காஞ்சிபுரம் அருகே சாதாரண விவசாய குடும்பம்தான். ஆனால் இன்றைய கல்விச் சூழல் எக்ஸ்ட்ரா கேர் எனும் பெயரில் குழந்தைகளைப் புத்தகப் பொதி சுமக்கும் மாடுகளாக்கிவிட்டது.
ஏதோ தமிழகத்தில் மட்டுமே உள்ள பிரச்சினை அல்ல இது. நாடு தழுவிய தேசியப் பிரச்சினை. முன்பு ஆர்.கே.நாராயணன் ராஜ்யசபாவில் பேசும் போது, குழந்தைகளுக்கு குறைவான புத்தகங்கள் மற்றும் எழுதும் உபகரணங்கள் கொடுப்பது குறித்து ஒரு தனிநபர் மசோதா கொண்டுவந்தார்.
அதனை அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டாலும் புற்றீசல்கள் போலப் பெருகி வரும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் தங்களுக்கென்று ஒரு சுய தர நிர்ணயத்தை வைத்துக் கொண்டு மாணவர்களைப் பொதி சுமக்க வைக்கின்றன. இந்த நிலை மாறத்தான் வேண்டும், என்கிறார்.
வருங்காலத் தூண்களின் முதுகொடிக்கும் இந்தக் கொடிய நிலைக்கு மத்திய மாநில அரசுகள் முற்றுப்புள்ளி வைக்குமா?
Courtesy : thatstamil
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment