Wednesday, June 11, 2008

குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவோம்!

இன்று சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்துவது குற்றம் என சட்டம் கூறினாலும் பல இடங்களில் அவற்றை முறையான நடைமுறைப்படுத்துவதில்லை. உலக அளவில் 16 கோடிக்கும் அதிகமான குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர் என்கிறது சர்வதேச தொழிலாளர் அமைப்பு.இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. "கல்வியே குழந்தை தொழிலாளர் முறைக்கு தீர்வு' என்பது இந்த ஆண்டின் கோஷமாக முன்வைக்கப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கு முறையாக அடிப்படை கல்வி கிடைக்காவிட்டால் எதிர்கால வாழ்வும் கேள்விக்குறியாகிறது. குழந்தை தொழிலாளர்கள் உருவாக வறுமை தான் முக்கிய காரணம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டுமெனில் கட்டணம், பாடப்புத்தகங்கள் மற்றும் இதர செலவுகளை பல குடும்பங்களால் சமாளிக்க முடிவதில்லை. ஏழைக்குழந்தைகள் இலவசமாக படிக்கும் அரசுப்பள்ளிகள் வசதிகள் குறைவாகவும், பராமரிப்பு இன்றியும் உள்ளன. குறிப்பாக கிராமப்புறங்களில் பள்ளிக்கூடங்களின் நிலை மிக மோசமாகவே உள்ளது. 2015ம் ஆண்டுக்குள் உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அடிப்படை கல்வி கிடைக்க வேண்டும் ஐ.நா., இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதனால் குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாகவே ஒழித்து விட முடியும் என நம்பப்படுகிறது. இதற்காக கீழ்க்கண்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

- இலவசமான கட்டாயக்கல்வி
- பெண் குழந்தைகளின் கல்விக்கான தடைகளை அகற்றுவது
- பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான, தரமான கற்கும் சூழ்நிலையை உருவாக்கித்தருவது
- முறையான தொடக்க கல்வியை இழந்த குழந்தைகளை கண்டறிந்து எழுத்தறிவிப்பது
- ஆசிரியர்களுக்கான பற்றாக்குறையை நீக்கி முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது
- குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டங்களை சர்வதேச அளவில் எல்லா நாடுகளும் தீவிரமாக நடைமுறைப்படுத்துவது
- வறுமையை எதிர்கொள்ள வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது
- குழந்தை தொழிலாளர் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்துதல்
கல்வி கற்கும் உரிமை அடிப்படை மனித உரிமையாக உள்ளது. பொருளாதார ரீதியிலும், சமூக ரீதியிலும் பின்தங்கியவர் தங்களை உயர்த்திக்கொள்ள ஒரே வழி கல்வியே. குறைந்தபட்சம் 14 வயது வரையாவது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என அறிவுறுத்தப்படுவதும் இதனால் தான். தனிநபர் மற்றும் குடும்பத்துக்கு மட்டுமல்லாமல் நாட்டுக்கு குழந்தை தொழிலாளர் முறையால் இழப்பு என்பதை பின்தங்கிய நாடுகளும் உணரத்தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy : Dinamalar

0 comments: