Friday, June 13, 2008

கையேந்திகளாக்க போட்டியிடும் அவலம்!:

சில தினங் கள் மழை பொழிந்தால், நாட்டிற்குப் பேரிடரா, பேரிழப்பா, நன்மையே ஏதுமில்லையா என்ற கேள்வி எழுகிறது. தமிழகத்தில் மழை பெய்தால், அதை ஒரு பெரிய விபத்து போல சித்தரித்து, செய்திகள் வெளியிடப்படுகின்றன. பெய்யும் மழையையும், மக்களின் அறியாமையால் அரசியலாக்க முயற்சிக்கின்றனரே. உலகில் குறைந்த அளவு மழை பெய்யும் பகுதிகளில் தமிழகமும் ஒன்று. ஜீவநதியும் கிடையாது. குடிநீர் பற்றாக்குறைக் கே, கடல் நீரைக் குடிநீராக்க வேண்டிய கட்டாய நிலை.கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக, ஓரளவு தமிழகத்தில் மழை பெய்கிறது. ஆனாலும், சில மாவட்டங்களில், வழக் கத்திற்குக் குறைவாகவே மழை பெய்துள்ளது. இச்சூழலில், மழை பெய்வது பெரிய கேடு போலவும், மழையால் பெரிய இழப்புகள் மட்டுமே உண்டாவது போலவும், உருவகப்படுத்துவது நன்மை தருமா? இது அறியாமையின் சின்னமா அல்லது சுயநலத்தின் வெளிப்பாடா? சிறு இழப்புக்களைச் சந்தித்தாலும், மழையால் மக்கள் பெறுவது, பெரும் நன்மையே என்பது யாரு மே அறியாத ஒன்றா? தனிநபருக்கு உதவித் தொகை வழங்கக் கோருவதில் மட்டுமே அக்கறை செலுத்துவதைக் காட்டிலும், நீர் மேலாண்மை திட்டங்கள் சரியான முறையில் நிறைவேற்றினால், தனிநபருக்கும் நாட்டிற்கும் தொடர்ந்து இழப்பு ஏற்படாமல் தடுக்க இயலும். நாட்டின் வேளாண் மேலாண்மைக்கு வழி தேடலாம்.காவிரி பெருகி, நாட்டைச் சேதப்படுத்திய பின், கடலில் கலந்து வீணாகிய வெள்ளத் தைத் தடுத்து, கி.பி., முதலாம் நூற்றாண்டில் கல்லணை கட்டி நெடுவயல் நீர் பாய்ச்சி, "சோழவளநாடு சோறுடைத்து' என, இன்றளவும் பெருமை கொள்ளச் செய்தவன் மன்னன் கரிகால்வளவன். எனவே கட்டடக்கலை, நீர் மேலாண்மைக் கலைகளில் பன்னெடுங்காலமாகத், தலைசிறந்து விளங் கியது நமது தமிழினம். இன்று மழையைக் கண்டால் பேரிடராக கருதுவோராக மாறிவிட்டோமே. என்னே நம் அறியாமையின் வளர்ச்சி!"நீர் மேலாண்மை' பாடமாக மாணவர்களுக்கு தற் போது போதிக்கப்படுகிறது. மழை பொழிந்தால் விரைந்து செயலாற்ற வேண்டியவை வேளாண் துறை, வேளாண் பொறியியல் துறை, நீர்பாசனத் துறைகளே. ஆனால், அறியாமையில் சிக்கித்தவிக்கும் மக்களின் திசை மாறிய கூக்குரலால், இத்துறைகள் தேவையான தொலைநோக்கில் செயல்பட இயலவில்லை, போதுமான முக்கியத்துவமும் வழங்கப்படுவதில்லை. மாறாக, வருவாய்த் துறையை செலவுத் துறையாக செயல்படச் செய்து, மக்களைக் கையேந்திகளாக்குகின்ற முயற்சிகளிலேயே, அரசியல் கட்சிகளும் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு ஈடுபடுகின்றன."மழை' மக்களுக்கு இறைவன் வழங்கும், "கொடை!' அதைச் செவ்வனே பயன் படுத்திக் கொள்ள வேண்டியது நமது "கடமை!' ஆகவே, மழை பெய்யும் காலத்தில் தற்காலிக உதவித் தொகை வழங்க வலியுறுத்துவதிலேயே, அரசியல் கட்சிகளும், விவசாயிகளும் அதிக கவனம் செலுத்தாமல், அச்சிறு இழப்பை விவசாயிகளே சரிகட்டிக் கொண்டு, தொலைநோக்கு நீர் மேலாண் மைத் திட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும்.அதற்கு சட்டசபையில் கட்சி மாச்சரியமின்றி, வேளாண்மை உற்பத்தி, நீர் மேலாண்மை தொழில் நுட்பம் சார்ந்து விவாதித்து, தமிழகத்தை நீர்மேலாண்மையில் மீண்டும் தலைசிறந்ததாக்கத் தக்க முயற்சிகள் மேற் கொள்ளுதலே நாட்டுக்கும், விவசாயிகளுக்கும் நன்மை தரும். தங்களுக்குள் அரசியல் செய்து கொள்ளவும், மக்களை திசை திருப்பவுமே சட்டசபை உறுப்பினர்களை, மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டிய காலம் இது.

Courtesy : வெ.சிவசுப்பிரமணியன், ஆட்சி அலுவலர் (ஓய்வு), செரியன் நகர், சென்னை

0 comments: