Wednesday, July 16, 2008

நம் பாரம்பரியத்தை நாமே இழக்கலாமா?


ஐரோப்பிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய கண்டங்களின் உட் பகுதிகளில் சுற்றிய அனுபவம் சொல்லும் பாடம், இந்திய உணவு குறிப்பாகத் தென்னிந்திய உணவு எல்லா இடங்களிலும் கிடைக்காது. சில நகரங்களில் மட்டும் தான் நம்மூர் ஆட்கள் தனிக் கடைகள் வைத்து நம்மூர் உணவுகளைத் "தங்க' விலைக்கு விற்றுக் கொண்டிருப்பர். சிறு நகரங்களிலும், ஊர்களிலும் அத்தகு வசதி எதுவுமில்லை. பட்டினி கிடப்பது தவிர வேறு வழியில்லை. நட்சத்திர ஓட்டல்களில் தங்கினாலும் மாடும், மனுஷனும் கிடைப்பரே தவிர, நாம் நாடும் உணவைப் பெற்றுப் பசியாறிட முடியாது.

நம் ஊர் நட்சத்திர விடுதிகளை ஒப்பிட்டுப் பாருங்கள். அவ்விடுதிகளில் ஐரோப்பிய, அமெரிக்க உணவுகள் அதே மாதிரியில், அதே சுவையில், அதே வடிவ சீனத் தட்டுகளில் கிடைக்கும். நம்மூர் உணவு தான், நம் ஊர்ச் சுவையுடன் கிடைக்காது. எத்துணை வேறுபாடு? ஐரோப்பியரோ, அமெரிக்கரோ நம் நாட்டிற்கு வந்தால் அவருக்கு ஏற்ற உணவைப் பெரும்பாலும் பெற்று உண்டு விட முடியும். ஐநூறு ஆண்டுகள் ஐரோப்பியர் கள் நம்மை ஆண்ட போதும், நம்முடைய உணவு வகைகள் எதனையும் கற்றுக் கொள்ளவோ, நம் நாட்டிற்கு எடுத்துச் செல்லவோ நம் உணவுகளுக்குப் பழக்கமாகவோ, அடிமையாகவோ அவர்கள் ஆனதில்லை. மறுதலையாக நம் ஊர் விடுதிகளில் வழங்கப் பெறும் உணவுகள் பெரும்பாலானவை ஐரோப்பிய, அமெரிக்கச் சுவை நோக்கிச் சென்றுவிட்டன.

ஐரோப்பியருடைய பண்பாடு, உடல் சார்ந்தது; லவுகீகத்தை அடிப்படையாகக் கொண்டது. நம் பண்பாடு மனம் சார்ந்தது; ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டது. அவர்கள் மூளைக்கே முதலிடம் கொடுப்பர்; நாம் இதயத்திற்கு முதலிடம் கொடுப்பர். அவர்களுக்கு அறிவியல் முக்கியம்; நமக்கோ கலையில் முக்கியம்.

இந்நிலையில், நம் ஊரிலேயே நம் உணவு முறை, உடை முறை, குடும்ப உறவு முறை, நல்ல பழக்க வழக்கப் பண்பாடுகளை நாம் ஏன் இழக்க வேண்டும்? பெற்றவளே குழந்தையைக் கைவிட்டு விட்டால், அக்குழந் தையை எடுத்து வளர்ப்பார் யார்? ஐரோ-அமெரிக்க முறைகளுக்கு மாறினதால் வந்துள்ள வயிறு, குடல் சார் நோய்களையும், பாலுறவு நோய்களையும் வராமல் தடுத்துக் காத்துக் கொள்வது எங்ஙனம் சாத்தியமாகும்?

இஸ்ரேல் நாட்டு யூதர்களைப் பற்றிய வரலாறு உலகம் அறிந்த ஒன்று. கி.மு.,வில் தம் பிறந்தகத்தை விட்டு ரோமானியர்களால் விரட்டப்பட்ட அவர்கள் உலக நாடெங்கும் அகதிகளாகவும், அனாதைகளாகவும் திரிந்தனர் என்றாலும், சென்ற இடங்களில் சிக்கனமாக இருந்தனர். கல்வி கற்பதில் முனைப்போடு இருந்தனர்.

அனைத்திலும் மேலாகத் தம் சமய ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருந்தனர். 1948ல் இஸ்ரேல் தனி நாடாக மத்திய ஆசியப் பகுதியில் உருவான போது, அவர்களுடைய தாய்மொழி ஹீப்ரு பேசப்படும் மொழியாக இல்லை. அவர்கள் கோவில்களில் பூஜை மொழியாக மட்டுமே இருந்தது. அத்தகு நிலையிலிருந்த மொழியை உயிர்ப்பித்து, புதிதாக எழுத்தமைத்து இஸ்ரேலிய ஆட்சி மொழி ஆக்கினர். உலகம் முழுவதும் பரவிக் கிடக்கும் யூதர்களைத் தாயகம் நோக்கி அழைத்தனர்.

அப்போது, கேரளப் பகுதியிலிருந்தும், வடகிழக்கு இந்தியப் பகுதியிலிருந்தும் யூதப் பரம்பரையினர் தம் தாயகம் செல்லத் துடித்தனர். உடனே, அவர்களை இஸ்ரேலிய அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் உண்மையாக யூதப் பரம்பரையில் வந்தவர்கள் தானா என்று பரிசோதித்துப் பார்த்தனர்.

பரிசோதனையில் முக்கியமானது, அவர்கள் தங்கள் பூர்வீக மதச் சடங்குகளைக் கொண்டுள்ளனரா என்பது தான் முதலாவதாக இருந்தது. அதன் அடிப்படையில் அம்மக்கள் இஸ்ரேலியக் குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டனர். தம் பாரம்பரிய வேர்களை இழக்காமல் எத்துணைச் சோதனைகள் நேர்ந்த போதும், அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதில் உலக மக்களிடையே யூதர்களுக்கு முதலாவது இடம் கொடுக்க வேண்டும்.

சமூக உளவியல் அறிஞர்கள், சீனர்களைத் தம் பாரம்பரியத் தைக் கப்பாற்றுவதில் குறிப் பிட்டுப் பேசுகின்றனர். சீனர்கள் அடிப்படையில் தாம் தாம் உலகத்தில் உயர்ந்தவர்கள் என்று நம்புகிறவர்கள். தம் மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியன தாம் உயர்ந்தவை என்று கருதுகிறவர்கள். தலைமைக்குக் கட்டுப் படுகிறவர்கள். உலகத்தின் எந்த மூலை முடுக்கிலிருந்தாலும் தங்கள் அடையாளத்தை இழக்காமல் காப்பாற்றிக் கொள்பவர்கள். அவர்களுடைய பெயர், மூன்று கூறுகளை உடையதாக இருக்கும். குடும்பப் பெயர், இனப் பெயர், தன் பெயர் என அமைந்திருக்கும். சான்றாக மா சே துங். இம்மூன்று கூறுகளும் மேற்கண்ட வரிசை முறையை உடையவை.

இம்முறையை அவர்கள் விட்டுக் கொடுப்பதே இல்லை. நிர்பந்தங்களின் காரணமாக எங்கேனும் மதம் மாற நேர்ந்தாலும், அவர்களுடைய சீனப் பெயரும் ஒட்டிக் கொண்டிருக்கும். இந்தப் பிடிவாதம் தான், 15ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் சீனாவை அடிமைப்படுத்த முயன்ற போது, அரசர் உட்பட அனைவரையுமே எதிர்க்க வைத்தது.

இதில், அவர்கள் முழு அளவு வெற்றி பெறவில்லை என்றாலும், முழு வெற்றி பெற்றவர்கள் சீன (மங்கோலிய) இனத்தைச் சேர்ந்த ஜப்பானியர்கள், தாய்லாந்துகாரர்கள். ஐரோப்பியர்களுக்கு அடிமைகளே ஆகாத ஆசிய நாடுகள் இவை என்பது உலக வரலாறு. புதிய கடவுள் போதனை செய்ய வருகிறோம் என்று நெதர்லாந்தில் இருந்தும் பிரான்சிலிருந்தும் மத போதகர்கள் தம் நாட்டிற்கு வந்த போது, அவர்களை உள்ளே நுழையவே ஜப்பானிய அரசும், தாய்லாந்து அரசும் அனுமதி அளிக்க மறுத்து விட்டன.

யூதர்கள், சீனர்கள் மட்டுமின்றி, இன்று உலகெங்கும் தம் ஆதிக்கத்தைச் செலுத்தும் ஐரோப்பிய, அமெரிக்கர்களுக்கு மூலவரான கிரேக்கரும் ரோமானியரும் தம் வேர்களை இழக்காத வித்தகர்கள் என்று சொல்ல வேண்டும். மிகப் பழைய பண்பாட்டையும், நாகரிகத்தையும் உடையது கிரேக்கம். அதனது பாதிப்பால் மேலும் பரிணமித்தது ரோமானியம்(இத்தாலி).

இவ்விரண்டிலிருந்து தான் ஐரோப்பிய மேற்குலகக் கலாசாரம் பிறந்து வளர்ந்து, தழைத்து உலகம் முழுவதும் படர்ந்தது. ஐரோப்பிய நாடுகள், தமக்குள் முரணிக் கொள்ளுமே தவிர, ஆசிரியர், ஆப்ரிக்கர் முதலானோர்க்கு அடிமை ஆனதே இல்லை. (மங் கோலியத் தலைவன் செங்கிஸ் கான் ஆண்ட சில காலம் தவிர)

நிக்காலோ மானுச்சி (கி.பி.1653-1708) என்ற இத்தாலியரின் பயணக் குறிப்பு இதை மேலும் உறுதி செய்கிறது. கி.பி.1653ல் வெனிஸ் நகரத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் வழி, மானுச்சி 14 வயது சிறுவனாக உலகைச் சுற்றிப் பார்க்கும் ஆசையில் புறப்பட்டார். கடலிலும் தரையிலுமாக 1380 மைல் கடும் பயணம் செய்து, தன் நண்பர் ஒருவருடன் இந்தியா வந்தடைந்தார். அப்போது, இந்தியாவை அவுரங்கசீப் ஆண்டு கொண்டிருந்தார்(1658).

உடன் வந்த நண்பர் இறந்து விட, மொகலாயச் சட்டப்படி, நண்பரின் உடைமைகளை நேரில் கைப்பற்ற அரசாங்க அதிகாரி, மானுச்சி தங்கி இருந்த இடத் திற்கு படை பரிவாரங்களுடன் வந்தார். வந்தவர், மானுச்சியின் உடைமைகளையும் சேர்த்துக் கைப்பற்றினார். மானுச்சி தடுத்தார். அப்போது, மொகலாய அரசு அதிகாரி, "நீ எங்கள் அரசருடைய அடிமை' என்று சீறினார். அதை மறுதலித்த மானுச்சி, "ஐரோப்பியர்கள் என்றும் எப்பொழுதும் எவருக்கும் அடிமையாக இருந்ததில்லை; இருக்கவும் மாட்டார்கள்,'' என்று கர்ஜித்தார். பின்னாளில், அவரே டில்லி அரச ஆலோசகராய் பதவியில் அமர்ந்தார்.

ஆக கூர்ந்து பார்த்தால், உலகில் பல நூறு ஆண்டுகளாகத் தம் தலைமையை உலக வரைபடத்தில் இருந்து இழக்காமல் நிரந்தரப்படுத்திக் கொண்டிருக் கும் யூதர், சீனர், கிரேக்கர், ரோமானியர் முதலான ஐரோப் பிய இன மக்களிடம் இருந்த மிக முதன்மையான பண்பு, தம் பாரம் பரியத்தை இழக்காமை தான்.

எனவே தான், உலகம் முழுவதும் பரவியிருக்கும் பண்பாட்டுத் தழுவுதலை மூன்று வகையாக்கி அறிஞர்கள் சொல்கின்றனர்.

முதல் வகை : ஐரோப்பிய முறை: ஐரோப்பியர் தம் தாயகத்திலும் செல்லும் இடங்களிலும் தம் மொழி, பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றை இழக்காததுடன், சென்ற இடங்களில் வாழும் உள்நாட்டு மக்களிடமும் பரப்பி விடுவர். உள்நாட்டு மக்கள் தம் மொழி, பண்பாடு, நாகரிகத்தை விட ஐரோப்பியருடையது தான் உயர்ந்தது என்று நம்பவும் வைத்து விடுவர்.

இரண்டாம் வகை : யூத முறை: தாய் நாட்டிலிருந்து பல்வேறு நாடுகளுக்குச் சிதறிய யூதர்கள், தமக்குரிய பண்பாடு முதலானவற்றை இழக்கமாட்டர். அன்றியும் தம்முடையவற்றை மற்றவர்கள் மேல் திணிக்கவும் மாட்டர்.

மூன்றாவது வகை : நீக்ரோ முறை: இம்மக்கள் தம்மையும், தம் தாயகத்தையும் அடிமைப்படுத்திய அயல்நாடுகளின் இறக்குமதிப் பண்பாடு முதலானவற்றை ஏற்றுக் கொள்வதுடன், தம்முடைய பாரம்பரியப் பண்பாட்டையும் தம் தாயகத்திலேயே இழந்து விடுவர்; இழிவாகவும் கருதுவர். இம்மூன்று முறைகளில் நாம் எந்த முறையைச் சேர்ந்தவர்கள் என்பதை எண்ணிப் பார்ப்போமா?

நன்றி்-க.ப.அறவாணன்

0 comments: