Wednesday, August 5, 2009

கவிதைகள்

சேம் பின்ச்

என் உடை நிறமும்
உன் உடை நிறமும்
ஒன்றென சாக்லெட் கேட்கிறது
அகதி முகாம் குழந்தை.

****************

அவர்கள் அழுகையை
உங்களால் புரிந்து கொள்ள முடியாது.
காரணம்
விமானம் பறக்கும்போது
மேலே பார்த்தால்
உங்களுக்கு சுவாரஸ்யம்
அவர்களுக்கு மரணபயம்.

**********************

உங்களுக்கு இங்கே
தமிழென்ற
உணர்வில்லை.
அவர்களுக்கு அங்கே
தமிழென்றால்
உணவில்லை.

*********************

அவர்கள்
‘என் நாடு’ என்று துரத்தினார்கள்.
வலித்தது.
இவர்கள்
‘எந்நாடு?’ என்று கேட்டார்கள்
இன்னும் அதிகமாக வலித்தது.

*********************
நீங்கள்
முத்தெடுக்கவும்
மீன் பிடிக்கவும்
மூழ்கினீர்கள்.
நாங்கள்
உயிர்பிழைக்க
மூழ்கினோம்.

******************
எங்கள் எல்லாருடைய
ரேஷன் கார்டிலும்
இருந்தது ஒரு பெயர்.

‘இறந்துவிட்டார்
எடுத்துவிடுங்கள் அந்தப் பேரை’
என்கிறார்கள்.

இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை நாங்கள்.

போருக்காக இருந்த பேர்-
பேருக்காவது இருக்கட்டும்.

*************************




*************************


தீபாவளிக்கு
வெடித்த வெடிகுண்டை
பீதியுடன் பார்க்கிறது
அகதிமுகாம் குழந்தை.

அவர்களுக்கு
அருகில் இருப்பவர்களாவது
வெடிக்காமல் கொண்டாடுவோம்.

******************
‘நீங்க தமிழா’ என்று
அகதிமுகாமிலிருந்து
ஆர்வமாக ஒரு குரல் கேட்ட கேள்விக்கு
பதில் வந்தது
‘யெஸ்’என்று.

********************
அங்கே
அந்தச் சகோதரியின்
உடையைக் கிழித்தார்கள்
பொறுத்துக் கொண்டாள்.
அவர்கள் புரிதலில்லாதவர்கள் என்று.

இங்கே
அதே சகோதரிக்கு
கிழிந்த உடை தருகிறீர்கள்
அழுகிறாள்.
நீங்களும் புரிந்து கொள்ளவில்லையே என்று.

*************************

ஒளிந்துவிளையாடும்
ஒவ்வொரு முறையும்
குழிக்குள் சென்றமர்கிறாள்
அகதிமுகாம் சிறுமி.

*******************

நாங்கள் தொட்டில் கேட்டுக் காத்திருந்தோம்.
நீங்கள் உதவி செய்தது
சவப்பெட்டிக்கு.

********************


இந்தியாவின் உதவிகள் போலவே
இந்தக் கவிதைகளும்
காலம் தாழ்ந்து.

********************************************

Thursday, July 9, 2009



" உலகம் உன்னை இறந்தவன் என்கிறது.. உறவுகளோ இறைவனாய் நம்புகிறது... உண்மை தாமதமாகவே வெளிப்பட்டாலும், சாதகமாய் இருந்தால் போதும் என்ற நம்பிக்கையில் நாட்கள் செல்கிறது!!"

ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்

உங்களைச் கொஞ்சம்
உலகம் தேடும்
முத்தமிழ் சிவப்பாகும்
போர் மேகங்கள் சூழும்
உங்களுக்கும் வலிகள் புரியும்
இயந்திரப் பறவைகள் எதிரியாகும்
ஆமிக்காரன் இயமன் ஆவான்
உயிர் வெளியேறிய
உடல்களை காகம் கொத்தும்
விழிகளிலே குருதி கசியும்
ஈழத் தமிழனாய் வாழ்ந்து பாருங்கள்!

Tuesday, May 19, 2009

தெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்


இன்றைய சூழ்நிலையில் நான் யார் ? தமிழனா, இந்தியனா, இந்தியத் தமிழனா என்ற கேள்விகள் என்னுள் கடந்த சில மாதங்களாக எழுந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு தமிழகத் தமிழன் மனிதில் உள்ள கேள்வியும் அது தான். இது குறித்து நண்பர் சொ.சங்கரபாண்டியின் கட்டுரையை சமீபத்தில் வாசிக்க நேர்ந்தது. என்னுடைய எண்ணத்தை அந்தக் கட்டுரை பிரதிபலிப்பதால் அவரது அனுமதியுடன் அதனை இந்த வலைப்பதிவில் பதிவு செய்கிறேன்.

தெளிவடைந்துள்ள என் அடையாளப் போராட்டம்

சொ. சங்கரபாண்டி

(இக்கட்டுரையின் பெரும்பகுதி வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதப் பட்டது)

உலகத்தில் இதுவரை நாடுகளுக்கிடையே நிகழ்ந்து வரும் போர்களுக்கும், ஒரு நாட்டுக்குள்ளேயும், ஒரு மாநிலத்துக்குள்ளேயும் கூட தோன்றும் அல்லது தொடரும் பூசல்களுக்கும் அடிப்படைக் காரணம் மனிதரின் பல்வேறு அடையாளங்களும், அவற்றுக்குள்ளேயான முரண்பட்ட நிலைகளுமாகும். அடையாளம் (Identity) என்கிற பொழுது மொழி, இனம், நாடு, மதம், சாதி, வாழும் பகுதி, பண்பாடு, பால்வகை, கட்சி என பலவித அடையாளங்களைக் குறிப்பிட முடியும். இவற்றுள் சில உண்மையான அடையாளங்கள் என்று சொல்லவே தகுதியில்லாதவை என்பதை சற்றுப் பின்னால் பார்க்கலாம். இவை எல்லாமே மனிதரின் புற அடையாளங்களே என்பதையும், மனிதர்களெல்லோருமே உயிர் அல்லது ஆன்மா என்ற அகநிலையில் ஒன்றானவர்களே என்பதையும் சிந்தித்துப் பார்த்தால் அத்தனை முரண்பாடுகளையும் உதறித்தள்ளிப் போய்க்கொண்டிருக்கலாமே. ஆனால் அவ்வளவு எளிதாகச் செய்துவிட முடியாது என்பதை பிறப்பு முதல் இன்று வரை எனக்குள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்து வரும் அடையாளப் போராட்டத்தின் மூலம் உணர்ந்து வருகிறேன். ஆனாலும் ஒரு தனிமனிதனுக்கு பல்வேறு அடையாளங்கள் இருக்க முடியும் என்பதையும், அவற்றுள் சில இயல்பாகவும், சில திணிக்கப் பட்டும் இருக்க முடியும் என்பதையும் உணர்ந்து வருகிறேன். அவ்வடையாளங்கள் ஒன்றுக்கொன்று இயைந்து பரிணமித்தும் அல்லது முரண்பட்டு ஒன்றையொன்று விழுங்கியும் இயங்கக் கூடும். இயல்பாக இருந்த அடையாளங்கள் வலுவிழந்தும், திணிக்கப் பட்ட அடையாளங்கள் வலுப்பெற்றும் நிலைக்கலாம் என்றும் உணர்கிறேன். சில வேளைகளில் இம்மாற்றத்தினால் சில நன்மைகளும் அல்லது அல்லல்களும் ஏற்படலாம். உதாரணமாக என்னுடைய அனுபவத்தை இங்கு ஆராய முற்படுகிறேன்.

நான் பிறந்த பொழுது எனக்கு இயல்பாகக் கிடைத்தது ஆண் என்ற பால் அடையாளம் மட்டுமே. அடுத்து தாயுடனும், உறவுகளுடனும் இயல்பாக வளர்ந்தது தமிழன் என்ற மொழி அடையாளம். வாழும் நாட்டால் வகுக்கப் பட்டது இந்தியன் என்ற நாட்டு அடையாளம். பிறந்த உடனே கற்பனையாக என்மேல் திணிக்கப் பட்டவை சாதி மற்றும் மத அடையாளங்கள். இவ்வாறான பல அடையாளங்களில் பள்ளிக்கு உள்ளே இந்தியன் என்ற அடையாளமும், பள்ளிக்கு வெளியே சாதி மற்றும் மத அடையாளங்களும் போதனைகளால் உரமிட்டு வளர்க்கப் பட்டன. தமிழன் என்ற அடையாளம் தமிழைப் படித்தும், பேசியும் வளர்ந்தவரை கூடவே இருந்து கொண்டேயிருந்தாலும் தமிழை விட பொருள் ரீதியில் முன்னேற்றத்தை அளிக்கவல்ல ஆங்கிலத்தின் முன்பும், மதம் வழியே காதில் விழுந்த சமஸ்கிருதத்தின் முன்பும் கொஞ்சம் கூனிக்குறுகியே நின்றது. திராவிட அரசியல் பரப்புரைகளால் தமிழ் மொழியின் பெருமைகள் ஒருபுறம் ஊட்டப் பட்டு வந்தாலும், இன்னொரு புறம் தமிழன் என்ற மொழி அடையாளத்தைப் பேணுவது குறுகிய சிந்தனையாக படித்த சமூகத்தினரால் சித்தரிக்கப் பட்டதால், என்னுடைய கல்வி உயர உயர தமிழன் என்ற அடையாளம் உள்ளத்தில் மட்டுமே ஒளிந்து கொள்ள ஆரம்பித்தது.

சைவமும், காந்தியமும் உயர்ந்த நெறியாக போற்றப் பட்ட என் சமூகச்சூழலில் மதமும், சாதியும் உண்மையிலேயே மனித அடையாளங்களல்ல என்றும், இயல்பான மனித அடையாளமான மொழி அடையாளம் பேணுவது குற்றமானதல்ல என்றும் தோன்றவேயில்லை. சாதிக்கும், மதத்துக்கும் எந்தவித புறவடிவக் கூறுகளோ, குணாதிசயங்களோ கிடையாது. பகுத்தறிந்து பார்த்து, அவற்றை ஒரு நொடிப்பொழுதில் துறக்கவும், மாற்றவும் முடியும் என்கிற போது அவற்றை அடையாளங்கள் என்று அழைப்பதை விட நிறுவனங்கள் என்று சொல்வதே சரியாகும். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனத்தில் நாம் உறுப்பினராக இருக்கும்வரைதான் அந்நிறுவனத்தோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்ள முடியும். ஆனால் மொழி அடையாளம் மூளையோடும், சுவாசத்தோடும் கலந்த இயல்பான அடையாளம் என்றாலும், அதை வைத்திருப்பது தவறானது என்று நான் படித்த சில மேட்டுக்குடி மேதாவிப் பத்திரிகைகளால் கட்டமைக்கப் பட்டன.

இந்தச் சூழலில் எனக்குள் ஒரு தெளிவை அடையக் காரணமாயிருந்தது ஈழப்பிரச்னையும், அதை இந்தியா எதிர் கொண்ட விதமும். காந்தியம்தான் மனிதாபிமானம் என்றிருந்த எனக்கு போலித்தனங்களை அடையாளம் காட்டிய பெரியாரியமும், போலித்தனங்களின் பொருளாதார அடிப்படையை புரிய வைத்த மார்க்ஸியமும் பரிச்சயமானது. எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத்திலிருந்து துரத்தப் பட்ட தமிழரின் துயரங்களை தமிழன் என்றல்லாமல் வெறும் மனிதாபிமான அடிப்படையில் புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறேன். தமிழ் மொழியை தங்களது அடையாளமாக வெளிப்படுத்திய ஒரே காரணத்திற்காக அரசு வன்முறையால் விரட்டியடிக்கப் பட்ட தமிழ் மக்களின் பிரச்னைக்குத் தீர்வாக இந்திய ஆளும் வர்க்கத் தேசியவாதம் காட்டிய வழியிலேயே நானும் முதலில் சிந்திக்கிறேன். தமிழன் என்ற அடையாளம் குறுகிய பிராந்திய அடையாளம் என்று எனக்குப் போதிக்கப் பட்டதால் எனக்கு அதுவே சரியாகப் பட்டது.

ஆனால் சில வருடங்களாக ஈழப்பிரச்னையை உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்த பொழுதுதான் புரிந்தது -- தமிழன் என்ற அடையாளம் இந்தியன் என்று கட்டியமைக்கப் படும் அடையாளத்துக்கு எதிராகக் கருதப் படுகிறதென்று. அதனாலேயே ஈழத்தமிழருக்கு மனிதாபிமான அடிப்படையில் தேடவேண்டிய தீர்வுக்குத் தடையாக அம்மக்களது தமிழ் மொழி அடையாளத்தை இந்தியா கருதுகிறதென்று. தமிழ் மொழி அடையாளம் மூடிமறைக்கப் படவேண்டிய அடையாளம் என்று கருதப் பட்டதால்தான் இலங்கையில் ஐம்பது ஆண்டுகாலமாகத் தொடரும் அடக்கு முறையைப் பெரிது படுத்தாமல், இலங்கை அரசிடம் சரணடைந்து வாழுமாறு தமிழர் வன்முறையின் மூலம் பணிக்கப் பட்டனர். இதுவே தனிப்பட்ட அளவில் என்னிடம் தமிழன் என்ற அடையாளம் மீட்டெடுக்கப் படக் காரணமாயிருந்தது. ஈழப் பிரச்னையில் தமிழர் என்று பார்க்காமல், மனித உரிமை அடிப்படையில் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய தீர்வு அளிக்கப் பட்டிருந்தால் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களிடம் தமிழன் என்ற அடையாளம் வலுப்பெறாமலே கரைந்து போயிருக்கக் கூடும்.

எந்தவொரு பொருளிலும் அல்லது பிரச்னையிலும் உண்மையை அறிய வேண்டுமெனில், வெளியில் பிரபலமாக நிலவும் வெகுஜன ஊடகங்களை மட்டுமல்லாமல் அரிதாகக் கிடைக்கும் அனைத்து நூல்களையும், பிரசுரங்களையும் பாரபட்சமின்றி படிக்க வேண்டுமென்ற தூண்டுதலை மறைமுகமாக என்னுள் ஏற்படுத்தியது ஈழப் பிரச்னை. பெரியாரியம் அந்தவகையில் என்னுடைய அனைத்து அடையாளங்களையும் உடைத்துப் போட்டது. போலித்தனமான அடையாளங்களான மதமும், சாதியும் மட்டுமல்ல. புறவடிவக் கூறுகளைக் கொண்டு இயல்பாக வாய்த்த ஆண் என்ற அடையாளமும், இயல்பாக வளர்ந்த தமிழன் என்ற அடையாளமும் கூட என்னுள்ளே அடித்து நொறுக்கப் பட்டன. மாறுபட்ட அடையாளங்களுடன் உள்ளவர்களையும் சமமாக (உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ இல்லாமல்) மதிக்க வேண்டும் என்றுணர்த்தியது பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம். அடையாளங்களை முன்வைத்து ஏற்றத்தாழ்வு செய்தலின் உண்மையான நோக்கமான பொருளாதாரச் சுரண்டலைப் புரிய வைத்தது மார்க்ஸியத் தத்துவம். தமிழன் என்ற அடையாளம் என்னுள் மீட்டெடுக்கப் பட்டாலும், தமிழ்த்தேசியவாதம் உள்பட அனைத்துத் தேசியவாதங்களிடமும் எப்பொழுதும் எச்சரிக்கையாக இருக்க உதவுகிறது பெரியாரியமும், மார்க்ஸியமும். மனித சமூகத்தின் சமநிலையைப் புறக்கணித்து, மனிதர்களிடம் உயர்வு தாழ்வு கற்பித்து ஒடுக்குமுறையைப் பயன்படுத்தும் அபாயத்தை அனைத்து தேசியவாதங்களும் உள்ளடக்கியவை.

கடந்த பல வருடங்களாக அமெரிக்க வாழ்க்கை எனக்குள் நடக்கும் அடையாளப் போராட்டத்தில் ஒரு புதிய பரிமாணத்தை அளிக்கிறது. அமெரிக்கன் என்ற அடையாளம் மற்ற அடையாளங்கள் போன்று புறவடிவத்தன்மை கொண்டதாக இல்லாமல், செயல்வடிவம் கொண்டதென்று சொல்லலாம். ஒருவகையில் பார்க்கப் போனால் மார்க்சியமும், பெரியாரியமும் வலியுறுத்தும் தனிமனித விடுதலையை செயல்வடிவமாகக் கொண்டதே அமெரிக்க அடையாளம். மொழி, நிறம், பால், இனம், நாடு என பலவிதங்களில் வேறுபட்டிருந்தாலும் மனிதர்கள் அனைவரும் சமமாக நடத்தப் பட வேண்டும் என்ற நிலைப்பாடும், எழுத்துரிமையும், பேச்சுரிமையும் எப்பொழுதும் மறுக்கப் படக் கூடாது என்ற நிலைப்பாடும் அமெரிக்கன் என்ற அடையாளத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது. இத்தகைய அமெரிக்க அடையாளத்துக்குப் புறம்பாக சில தனிநபர்களும், நிறுவனங்களும், புஷ் அரசு உள்ளிட்ட சில அரசுகளும் நடந்து வந்தாலும், அமெரிக்கன் என்ற அடையாளம் இங்கு வந்தேறியுள்ள அனைத்து மக்களிடமும் நல்லதொரு தாக்கத்தையே ஏற்படுத்துகிறது.

இப்படியாக தொடர்ந்து நிகழ்ந்து வரும் அடையாள மாற்றங்களுள் ஒரே நேரத்தில் பல அடையாளங்கள் இருப்பதில் ஆச்சரியமுல்லை. உதாரணமாக, மொழி வாயிலான தமிழன் என்ற அடையாளம் வேண்டுமென்றே ஒடுக்கப் பட்டதாக உணர்ந்ததால் கிளர்ந்தெழுந்த தமிழன் என்ற அடையாளமே என்னுடைய முதல் அடையாளம். ஆனாலும், பொதுவான பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையில் இந்தியன் என்ற அடையாளமும், வந்து குடியேறி வாழும் நாட்டினால் அமெரிக்கன் என்ற அடையாளமும் கூடவே இருப்பதில் எனக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை. அதே நேரத்தில் இந்த மூன்று அடையாளங்களில் என்னை மற்றவர்களை விட உயர்ந்தவன் என்று சொல்லுமளவுக்கும் எந்தவித பெருமையையும் நான் உணரவில்லை.

இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற அடையாளத்தை மிஞ்சிய அடையாளமாக தமிழன் என்ற அடையாளம் இருக்கக் கூடாது என்று கூற நினைப்பவர்களை நினைத்து முன்பெல்லாம் எரிச்சல் வரும், இப்பொழுதோ அனுதாபப் படுவதைத் தவிர வேறொன்றும் தோன்றவில்லை. தமிழன் என்ற இயல்பான அடையாளத்தை அங்கீகரிக்கும் பொழுது தான் இந்தியன் அல்லது அமெரிக்கன் என்ற கட்டமைக்கப் பட்ட அடையாளமும் வலுப்பெற்று இயல்பான அடையாளமாக மாறும். அதுதான் அமெரிக்காவின் வெற்றிக்கும் இரகசியம். எனவே நான் முதலில் தமிழன், அதன் பிறகுதான் இந்தியன் மற்றும் அமெரிக்கன் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் பிறந்து வளரும் என் குழந்தை முதலில் தன்னை அமெரிக்கனாகவும், அதன் பின்னே தமிழனாகவும், இந்தியனாகவும் உணரலாம். அதுவே இயற்கையும் கூட!

மேலே எழுதியுள்ள கட்டுரை வாசிங்டன் பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் காலாண்டிதழான 'தென்றல் முல்லை'க்காக நான் 2007 செப்டம்பரில் எழுதியது. ஈழத்தமிழர் மேல் பற்றுள்ள தமிழகக் கட்சிகள் பங்கேற்றுள்ள அரசுகள் தமிழகத்திலும், டெல்லியிலும் இருப்பதால், புலிகளின் மேலுள்ள குறைபாடுகளையும் அவநம்பிக்கைகளையும் தாண்டி, தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை ஆதரிக்காவிடினும், புரிந்து கொண்டு அரசியல் முதிர்ச்சியுடன் இந்தியா செயல்படும் என்ற நப்பாசையைத் தமிழர்கள் கொண்டிருந்த நேரம். அதன் பின்னால் 2008 அக்டோபரில் சயந்தனின் இடுகையொன்றில் (http://blog.sajeek.com/?p=431) இட்ட பின்னூட்டம் கீழே. அப்பொழுது ஈழத்தமிழர்களும், தமிழகத்தமிழர்களும் கலைஞர் இந்திய அரசை வற்புறுத்திப் போர் நிறுத்தத்துக்கு வழிவகுப்பார் என்று பெரிதும் ஏங்கிய நேரம்.

“என்னைப் போன்ற இந்தியத் தமிழர்கள் இந்தியாவின் மேல் நம்பிக்கை வைப்பதே வீண். ஏனென்றால் இந்தியாவில் தமிழர்கள் ஓரளவுக்கேனும் தன்மானத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதன் முக்கியக் காரணம், இந்தியாவில் பெரும்பான்மை இனம் என்று சொல்லிக் கொள்கிற அளவுக்கு தனியொரு இனமில்லாததால்தான். எல்லா இனங்களுமே ஐம்பது விழுக்காட்டுக்கும் கீழ்தான். இல்லையெனில் நாங்களும் ஈழத்தமிழர்களைப் போலவே வன்முறையால் என்றோ ஒடுக்கப் பட்டிருப்போம். எடுத்துக் காட்டாக, கட்டாய இந்தித் திணிப்புப் பிரச்னையில் நேருவின் வாக்குறுதி என்றெல்லாம் ஒன்றைப் பார்த்திருக்க முடியாது. போதாமைக்கு சோ, இராம், சுப்பிரமணியசாமி, சிதம்பரம் போன்ற பார்ப்பனிய-பனியா-இந்தியக் கைக்கூலிகளையும் எங்களுக்குள்ளேயே எப்பொழுதும் விட்டு வைத்திருக்கிறோம். எங்களது கலைஞரின் குடும்பத்தினர் போன்றவர்கள் தமிழகக் கொள்ளையில் ஆரம்பித்து தற்பொழுது அகில இந்திய அளவில் கொள்ளையடித்துச் சொத்துச் சேர்த்துக் கொள்ளத் தெரிந்திருக்கிறார்கள். உணர்ச்சி வயப்படுவதைத் தவிர ஏதும் தெரியாத வைக்கோ போன்றவர்கள் இன்னொரு புறம். எனவே தன்மானம் என்பதெல்லாம் தமிழகத் தமிழனுக்குக் கிடையாது. அந்த ஈரோட்டுக் கிழவன் சமூக மற்றும் பொருளாதாரத் தன்மானம் கிடைப்பதற்காகப் போராடியதால், தமிழ்நாட்டுத் தமிழர் தம்மளவில் விழிப்புணர்வடைந்து முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.

உணமை இப்படியிருக்க ஈழத்தமிழர்கள் எம்மிடம் எதிர்பார்ப்புகள் வைத்திருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத் தமிழர்கள் சொல் என்றுமே டெல்லி அம்பலத்தில் ஏறாது. ஈழத்தமிழர்கள் பட்டு வருகிற இன்னலுக்கு இந்தியா உதவ வேண்டுமானால் தமிழினம் என்ற அடிப்படையிலான அக்கறை இந்திய அரசுக்கு இருக்க வேண்டியதில்லை. வெறும் மனிதாபிமான அடிப்படை ஒன்றே போதும். அந்த அளவுக்குக் கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. இந்தியா ஒரு போதும் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவாது, இலங்கை அரசுக்குத் தான் உதவும், ஏனென்றால் இந்திய இனமும், சிங்கள இனமும் தம் அடிப்படை வேரில் ஒன்றே. இந்திய அரசு சிங்கள் அரசுக்கு உதவுவது அதன் அடிப்படையிலேயே. (இந்திரா காந்தியின் காலத்தில் உதவியதாக ஈழத்தமிழர்கள்தான் நன்றியுடன் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அவர் செய்தது கூட அப்போதைய பூகோள அரசியல் இலாபத்துக்காகத்தான்)

இந்தியாவின் பண்பாட்டு வேர்கள் என்னுள்ளே எப்பொழுதுமே இருக்கும் என்றாலும் இந்திய மக்களின் மேல் அந்த அடிப்படையிலான என்னுடைய அன்பும், ஈர்ப்பும் எதிர்காலத்திலும் எனக்கு இருக்கும் என்றாலும், ஒரு இந்தியன் என்று என்னைச் சொல்லிக் கொள்ள வெட்கப் படுகிறேன். வேதனைப் படுகிறேன். இந்தியா என் முகத்தில் இது வரை கரியைத்தான் பூசிக்கொண்டிருக்கிறது.

உங்களைப் போலவே ஈழத்தின் வலிகளையும், இரத்தக் காயங்களையும், வேதனைகளையும் மனதில் அனுபவித்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்ற எத்தனையோ இந்தியத் தமிழர்களையும் மன்னியுங்கள் என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தெரியவில்லை.”

* * *

ஆனால் இன்று இந்தியாவே ஈழத்தமிழர்களை அழிக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பது மிகத் தெளிவாக அறியவந்தபின் என்னுள்ளே நிகழ்ந்த அடையாளப் போராட்டமும் இப்பொழுது தெளிவடைந்திருக்கிறது. நான் இனி இந்தியனுமில்லை, இந்தியத்தமிழனுமில்லை. தமிழன் மட்டுமே. தமிழன் என்ற அடையாளத்துக்கும், இனத்துக்கும் பலமுள்ள முதல் எதிரியாக இருக்கும் நாடு இந்தியா என்பது தெளிவாக நிரூபிக்கப் பட்டு விட்டது. பொதுப் பண்பாட்டு அடிப்படையில் மற்ற இந்தியர்களுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதைக் கூட இனி நான் மறுக்க வேண்டும். இது இந்தியர்களின் மேலுள்ள வெறுப்பினாலல்ல. அருந்ததி ராய் போன்ற முற்போக்குச் சிந்தனையாளர்களுக்குக் கூட ஈழத்தமிழரின் வலி எளிதில் புரிய மறுக்கிற பொழுது மற்ற இந்தியர்களை எந்தக் காலத்திலும் புரிய வைக்க முடியாது. புரிய மறுக்கும் வரை தமிழினப் படுகொலைகளுக்கு அவர்களும் உடந்தையாகவே இருக்கின்றனர்.

சீனா, பங்களாதேசம், பாக்கிஸ்தான் போன்ற அண்டை நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் என்னைப் பொறுத்தவரை இனி எந்த வேறுபாடுமில்லை. அந்த நாடுகளிலெல்லாம் இயற்கையின் சீற்றத்தால் பேரிழப்பு ஏற்படும் பொழுது மனிதாபிமான அடிப்படையில் வருந்துவதும், சிறிய அளவில் உதவுவதும் உண்டு. அப்படியொரு உறவை மட்டுமே இந்தியாவுடனும், இந்தியர்களுடனும் கடைப்பிடிக்க விரும்புகிறேன். மற்றபடி இந்தியா தமிழர்களின் முதல் எதிரி நாடு என்ற பிரக்ஞையோடு செயல்படுவேன். தமிழர்களுக்கென்று ஒரு நாடிருந்தால் உலக நாடுகளும் இப்படி இந்தியாவின் விருப்பப்படி படுகொலைகளைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டா. எனவே உலக அளவில் தமிழர்கள் தம் அடையாளத்தை மீட்டெடுக்கும் புதிய முயற்சிகளில் இறங்க வேண்டும் என்று விரும்புகிறேன், உறுதி பூண்டுள்ளேன், அதற்காக உழைக்கவும் இருக்கிறேன்.

வாழ்க தமிழினம்



"தேடிச் சோறுநிதன் தின்று - பல சின்னச் சிறுகதைகள் பேசி - மனம் வாடித் துன்பமிக உழன்று - பிறர் வாடப் பலசெயல்கள் செய்து - நரை கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வே னென்று நினைத் தாயோ?"

என் பள்ளி பருவம் தொட்டு நான் என் மனதுக்குள் ரசித்த என் ஹீரோ பற்றி இன்று பல பல செய்திகள். அவை உண்மையோ பொய்யோ தெரியாது . ஆனாலும் இதை எழுதும் போது என் மனசு வலிக்கிறது. கண்களில் நீர் துளிர்க்கிறது.
இன்று சிங்கள தேசம் கொண்டாடுகிறது. சில தமிழ் பத்திரிக்கைகள் கொண்டாடுகிறது. சில தமிழ் தலைவர்களுக்கு கொண்டாட்டம். சிலருக்கு திண்டாட்டம் .இனி எதை வைத்து அரசியல் நடத்துவது என்று. இருபத்துஐந்து வருட போராட்டம் இரண்டு லட்சம் தமிழ் மக்களின் தியாகம் எல்லாம் முடிந்தது. தமிழன் என்ற இனம் உலகத்தில் உண்டு என்று உலகுக்கு சொன்னவர்கள். எத்தனை தடை இருந்த போதிலும் வான் படை கண்ட உன்னத தமிழர்கள். அகதிகளாய் சென்றாலும் சென்ற இடங்களில் எல்லாம் செல்வம் சேர்த்தவர்கள் (தமிழ் நாட்டுக்கு வந்தவர்களை தவிர). உலகம் தமிழ் அகதிகளாய் தன்னோடு அரவணைத்து கொண்டது. தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் மட்டும் முகாம்களில் அடைதது வைத்தனர். இதில் சிங்களவனுக்கு தமிழன் வழிகாட்டி .இந்த நிலைமைக்கு யார் காரணம். நிச்சயம் சிங்களவனோ இல்லை சோனியா காந்தியோ இல்லை.நாம் தான். உலகத்தில் தன் இனம் அழிக்கப் படும் போது வேடிக்கை பார்த்த இனம் தமிழ் இனம் மட்டும் தான். ரோம் எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்தானாம். அவனுக்கு அடுத்து நமது தமிழர் தலைவர் கருணாநிதி. அப்புறம் நாம் தமிழர்கள். ஒருநாள் நமது வருங்கால சந்ததியினர் கதை சொல்வார்கள் ." முன்னொரு காலத்தில் தமிழினம் என்று தமிழ்நாட்டில் இருந்தது .சிறிலங்காவிலும் இருந்தது .அப்புறம் அவர்களே சண்டை போட்டு தங்களை தாங்களே கொன்று கொண்டார்கள் ." இதையும் வேறு எதாவது மொழியில் தான் சொல்வார்கள் . ஏனெனில் அப்போது தமிழ் இருக்காது. தமிழ் இனம் இருக்காது.நாம் எல்லோரும் ஆங்கிலம் படித்து ஆங்கிலேயர் ஆகி விடுவோம். இந்தி படித்து இந்தியன் ஆகியிருப்போம் .ஈழத்தில் தமிழினம் அழிந்து போய் இருக்கும். என்ன செய்வது. நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் .மக்கள் யாரும் ஒட்டு போடாமலேயே அதிகமான வோட்டு வித்யாசத்தில் செயிக்கலாம் .இந்த நாட்டில் பிறந்ததற்காகவும் தமிழனாய் இருப்பதற்காகவும் வெட்கப்படுவதோடு வேதனைபடுவதோடு நாம் என்ன செய்ய முடியும். வழக்கம் போல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் கப் வாங்குமா என்று பார்க்க வேண்டியதுதான். ஈமெயில் சாட்டில் கடலை போட வேண்டியதுதான். அப்புறம் நான் இந்து ,நீ கிறிஸ்ட் என்று சண்டை போட வேண்டியது தான் .மனசு ரொம்ப வலிக்குது. ஏனெனில் மனிதர்களை விட நமக்கு மதம்தான் முக்கியம் என்னையும் சேர்த்துதான். வாழ்க தமிழனம். வாழ்க அவர்களது சுயநலமும் துரோகமும்

Thursday, April 23, 2009

கலைஞர் அவர்களுக்கு ஒரு பகிங்கர கடிதம்...



கலைஞர் அவர்களுக்கு,

எனக்கு அரசியல் விளையாட்டு அந்த அளவுக்குஅதாவது உங்கள் அளவுக்கு தெரியாது எனக்கு.
எனக்கு நினைவு தெரிந்த நாளில் அரசியல் அறிந்த வயதில் எம்ஜியார் அவர்கள் கோலோச்சி கொண்டு இருந்தார். அதன் பிறகு நீங்கள்தான் இன்று வரை....

நீங்கள் சொல்வது போல் தமிழக அரசியல் எடுத்து யாராவது பேச ஆரம்பித்தால் அதில் உங்களை திட்டியோ அல்லது பாராட்டியோ பேசாமல் தமிழக அரசியல் பேச முடியாது. அது தமிழக வரலாற்றில் எவருக்கும் கிடைக்காத பாக்கியம்.

ரயில் தண்டவாளத்தில் தலை வைத்ததில் இருந்து, வீரானம் வரை எகப்பட்ட சர்ச்சசைகள் உங்களிடம்.
நான் பழய விஷயத்தை கிளற விரும்பவில்லை. அது இப்போதைய தேவையும் அல்ல...

ஆட்சியை பொருத்தவரை நன்றாகவே இருக்கிறது எப்போதாவது சிறு சிறு தவறுகள் செய்யும் போது எல்லாம் உங்களுக்காக நாங்கள் பரிந்து பேசி இருக்கிறோம், எத்னையோ நண்பர்களின் நல்ல நட்பு உங்களால் பிரிந்து போய் இருக்கிறது.

விட்டு தள்ளுங்கள் எங்களுக்கு நீங்கள்தான் வேண்டும்.

நீங்களும் திருடர்தான் ஆனால் என்ன கொஞ்சம் நல்ல திருடர்அவ்வளவுதான்.
எல்லோரும் 75 பர்சன்ட் அடித்தால் நீங்கள் பத்திலிருந்து 20 பர்சென்ட் அடிப்பீர்கள். அது எல்லோரும் செய்தே ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயமும் கூட...
கட்சி நடத்த வேண்டுமே?

ஒரு சாதராண தற்க்கொலை கேஸ் உங்கள் தூக்கத்தை கெடுக்கும் என்று நீங்கள் கணவிலும் நினைத்து பார்த்து இருக்கமாட்டிர்கள்.

அந்த முட்டாள், இலங்கை தமிழர்கள் வாழ்க என்று குரல் கொடுத்து தீக்கு தன்னை தின்ன கொடுத்தது இருந்தால் அது எப்படியும் சாதாரண தற்கொலை கேசாக மாறி இருக்கும்.

நீங்களும் நிம்மதியாக இருந்து இருப்பீர்கள். அடுத்து கயல் விழிக்கு என்ன பதவி கொடுக்கலாம் என்று யோசித்து இருப்பீர்கள்.

செத்த முண்டம் தன் அறிவு தாகத்தை ஒன்று திரட்டி ஒரே நேர் கோட்டில் யோசித்துஇறப்புக்கு பிறகு தன் உடலை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்து இருக்கிறான் என்றால் யோசித்தவன் எப்படி முன்டமாவான்? அவன் எப்படி யோசிக்கதெரியாதவன் ஆவான்? தமிழகத்தில் உள்ள எல்லோரையும் பதினாறு பக்க கடிதத்தில் வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டு அல்லவா உயிர் துறந்து இருக்கிறான் . அது நீங்களே என் நாங்களே எதிர்பாராதது.


அவன் சமுக கோபத்தை மிக சிறப்பாக பதிவு செய்து விட்டு சென்று இருக்கிறான். இன்றளவும் உங்கள் மேல் மையல் கொண்டவர்கள் முத்துக்குமரன் விஷயத்தை பெரிது படுத்தாமல் இருக்கிறார்கள். அல்லது சப்பை கட்டு கட்டுகிறார்கள்

நான் அப்படி அல்ல,


இலங்கை தமிழர்களுக்காக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி ராஜினாமா அறிவித்தது நாங்கள் அல்ல நீங்கள் தான். அதிலேயே உங்கள் பெயர் ரிப்பேர் ஆகிப்போனது.
அடுத்ததாக பிரனாப் முகர்ஜி இப்போது அப்போது இலங்கைக்கு போகிறேன் என்று சொன்ன போது நீங்கள் தலையாட்டியது மட்டும் அல்ல...எங்களையும் ஆட்ட வைத்தீர்கள்.

நீங்கள் சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினீர்கள் மத்திய அரசு உடலுறவில் கிழிந்து போன நீரோத் போல் நம் சட்ட மன்ற தீர்மானத்தை தூக்கி போட்டது. பொறுத்துக்கொண்டோம்.

கடைசியாக பாதுக்காக்கப்பட்ட இடத்தில் குண்டு போடட்டார்கள். அப்போதாவது உங்கள் கண்டனத்தை தெரிவித்தீர்களா ? இல்லையே.

இலங்கை தமிழர்களுக்காக எப்போதும் இழப்புகளை சந்திப்பது திமுகதான். இதில் கொடுமை என்ன வென்றால் எப்போதும் எதிர் பேச்சு பேசிய, இந்து ராம் ,சோ,ஜெ,சுவாமி எல்லோரும் நல்லவர்களாகி போய்விட்டார்கள். அவர்களை யாருமே கேள்வி கேட்கவில்லை, கேட்டாலும் பதில் கிடைக்காது என்பது தெரியும். அதனால்தான் நாங்கள் உங்களை கேட்கிறோம்.

தினமும் பிச்சை போடும் பெண்மனிக்குஅன்று வீட்டி்ல் சாப்பாடு இல்லை அதனால் அவள் பிச்சைக்காரனை நாளைக்கு வா என்கிறாள், ஆனால்எப்போதும் பிச்சை போடாத எதிர்வீட்டுக்காரி பிச்சை போட அந்த பிச்சைக்காரன் இப்படித்தான் சொன்னான்.

டெய்லி பிச்சை போடற தேவிடியா இன்னைக்கு போடலை..
என்னைக்கும் பிச்சை போடாத மகராசி இன்னைக்கு போட்டு இருக்கா என்றானாம் அதுதான் உங்கள் இப்போதைய நிலையும்.

அன்று ஜெ சொல்வது போல்தான் இப்போது நீங்களும் சொல்லி இருக்கிறீர்கள் இலங்கை தமிழர்களுக்கு உதவுவோம் ஆனால் புலிகளுக்கு உதவமாட்டோம் என்று சொல்கிறீர்கள்...

சோனியாவுக்காக சொல்பவர் என்றால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து தீக்குளித்த முத்துக்குமரன் குடும்பத்துக்கு ஏன் 2 லட்சம் நிவாரன தொகை அளித்தீர்கள், சவ ஊர்வலத்தில்புலிக்கொடி போர்த்தி புலித்தலைவர் படத்தை எடுத்துபோனார்களே எம் மக்கள் அவர்களை கைது செய்ய வேண்டியதுதானே?

முடியாது ஏனென்றால் அது ஒரு எழுழ்ச்சி அதை கட்டுப்படுத்த முடியாது என்பதால் அடக்கி வாசித்தீர்கள். ஒரு சாதாரன பத்திரிக்கையாளன் தற்கொலை செய்து இறந்ததுக்கு பொதுமக்கள் ஏன் மெழுகு வர்த்தி ஏந்தி தன் துக்கத்தை தெரிவிக்க வேண்டும்.

அதை விட கொடுமை மகர ஜோதி, சொர்ககவாசல் திறப்பு என்று நேரலை செய்யும் உங்கள் டிவியும் உங்கள் பேரன் டிவியும் நேரிடி ஒளிபரப்பு செய்யவில்லை.ஒபாபமா பதவியேற்பை போட்டி போட்டுக்கொண்டு ஒளிபரப்ப செய்தீர்கள் முத்து்க்குமாரன் தமிழன் என்பதாலா அல்லது அவன் உண்மை பேசிவிட்டதாலா?

ஏன் ஏன்றால் அவன் எழுப்பிய கேள்வி நியாயமானது...அதில் கிஞ்சித்தும் சுயநலம் இல்லை.

சாதரனமாக தமிழன் ஒகேனெக்கல் கூட்டு குடி நீர் என்றாலே கர்நாடகத்தில் தமிழக பேருந்து மீது கல் வீச்சு நடக்கிறது. நாம் அதை வேடிக்கை பார்த்து 40 நமதே என்று சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.

இப்போதும் உங்களை மட்டும்தான் நாங்கள் நம்பி இருந்தோம் பொதுக்குழுவில் ஏதாவது முடிவு எடுப்பீர்கள் என்று .....
எதிர்பார்த்தது போல் நல்ல முடிவு எடுத்தீர்கள் நீங்கள் மருத்துவமனையில் தங்கி இருப்பதை இன்னும் ஒரு வாரத்துக்கு விரிவு படுத்தி இருக்கிறீர்கள் அவ்வளவே.

இப்போது கூட அனுதினமும் உங்கள் தொலைக்காட்சியில் வருவது போல் கடலில் கட்டு மரம் என்று இனியும் கதை விட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழின தலைவர் என்ற பட்டம் கூட சிலகாலத்துக்கு வேண்டாம் அதை கொஞ்சகாலத்துக்கு தூக்கி தூர போடுங்கள்.
இந்த பதிவு கூட உங்கள் மேல் இன்றளவு நான் வைத்து இருக்கும் மரியாதைக்குதான்.

இன்னும் காங்கிரஸ்காரர்கள் பின்னால் நீங்கள் நின்றீர்கள் என்றால் 40ல் ஒன்று கூட தேறாது. இதுதான் அப்பட்டமான உண்மை. மக்கள் எல்லாவற்றையும் கவனிக்கிறார்கள்.. அதனால்தான் சரத்குமாருக்கு 800 சொச்ச ஓட்டுக்கள்.
மக்களுக்கு தகவல்கள் அசுர வேகத்தில் கிடைத்து விடுகின்றன...

சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி மட்டும் மிஞ்சும் ஏனென்றால் நீங்கள் தமிழர்களுக்கு செய்த வாழ்நாள் சாதனைக்காக...

படித்தவர்கள் மொழிப்புலமை பேச்சுத்திறமை எல்லாம் கற்றுக்கொண்டது உங்களிடம்தான். பொதுவாக படித்தவர்கள் பிரமனல்லாதவர்கள் அதிகம் இருக்கும் கட்சி திமுகதான் இப்போது
உங்களையே படித்தவர்கள் கேள்வி கேட்க ஆரப்பித்துவிட்டார்கள் என்றால் யோசியுங்கள்...

நீங்கள் மாறன் குடும்பத்தாருடன் இணைந்த நிகழ்வு புகைபடத்தை பார்த்து ரசித்தால் போதாது, புலம் பெயர்ந்த கோடிக்கணக்கான நம் இன இலங்கை தமிழ் மக்கள் தத்தம் குடும்பத்தாருடன் இணைந்து எடுத்த புகைபடத்தை உவகையுடன் பார்க்க வேண்டாமா?


நான் கூட உங்களை கேள்வி கேட்ட முதல் பதிவும்இதுதான், முதல் கடிதமும் இதுதான். கேள்வி கேட்க காரணமாக இருந்த இன்லெக்சுவல் முத்துக்குமரனுக்கு
என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Thursday, March 19, 2009

சிறு துளி.....- உலகத் தண்ணீர் தினம்




மண் மரம் மழை மனிதன் வலைப்பூவில் இருந்து இதோ ஒரு இடுகை.

சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி. நீர் சேமிப்பைப் பற்றியது.

ஒரு முறை எங்கள் தொழிற்சாலை தரக்கட்டுபாடு சோதனைச் சாலையிலிருந்து ரிப்போர்ட்டுகள் வெளியிடுவதில் தேக்கம் கண்டது. காரணம் சுத்திகரிக்கப்பட்ட நீர் பற்றாக்குறை. நீர் சுத்திகரிக்கும் உபகரணம் (Distillation unit) பழுதாகி பல சோதனைகளை மேற்கொள்ள முடியவில்லை. வெளியிலிருந்து வாங்குவதற்கு முயற்சி செய்தும் பல காரணங்களால் வந்து சேரவில்லை. இதனால் கைவசம் சரக்கு இருந்தும் அனுப்ப முடியாத நிலைமை. பெட்ரோல் பங்கிலிருந்து பாட்டரி நீரையாவது வாங்கி செய்யலாம் அவற்றின் தரம் சரியில்லை என்று பதில் வந்தது.

இதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு தொழிற்சாலையை சுற்றி வரும்போது குளிர்பதன அறைக்கான எந்திரத்திலிருந்து நீர் ஒரு சிறிய ப்ளாஸ்டிக் குழாய் வழியாக ஒழுகிக் கொண்டிருப்பதைக் கண்டேன். இதை ’காண்டென்சேட்’ என்று சொல்வார்கள். இது காற்றிலிருக்கும் அதிகமான ஈரப்பதம் கம்ப்ரெஸரின் உயர் அழுத்தத்தில் கனிந்து திவலைகளாகக் மாறி வெளியேறுவது.

இப்படி சதா நீர் வெளியேறிக் கொண்டிருப்பது வழக்கமான காட்சிதான் என்றாலும், அன்று மின்னலென ஒரு எண்ணம். நேரடியாக காற்றிலிருந்து கனிந்து வருவதால் அதுவும் சுத்திகரிக்கப்பட்ட நீர் தானே! அதில் எவ்வித உப்புகளும் கரைந்திருக்க முடியாதல்லவா !

உடனடியாக ஒரு நல்ல சுத்தமான குழாயை செருகி அந்த நீரை சுத்தமான கண்ணாடி குடுவையில் பிடிக்கச் சொல்லி சோதனைச் செய்யச் சொன்னேன். மூன்று முக்கிய பரிசோதனைகளிலும் வெற்றி.

1) pH =7.63; 2) conductivity= 0.0 ; 3) Total Dissolved Solids= 0.0 ppm

அன்றிலிருந்து நீரை தனிப்பட்ட முறையில் சுத்திகரிக்க மின்சார சக்தியை பயன்படுத்துவது நின்றுவிட்டது. ஏற்கனவே மின்சாரத்தால் இயங்கும் குளிர்பதன இயந்திரம் சுத்திகரிக்கப்பட்ட நீரை ஒரு உப பொருளாக தந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாளைக்கு 12 லிருந்து 15 லிட்டர் வரை சுத்தமான பரிசோதனைகளுக்கேற்ற நீர் கிடைக்கிறது. ஆனால் தேவையோ 10 லிட்டருக்கும் குறைவு.

10 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீருக்கென 3KW மின்சார சக்தியை பயன்படுத்தினால் இரண்டரை மணிநேரங்கள் தேவைப்படும். அதற்கான மின்சக்தி ஏழரை யூனிட்டுகள், ஒரு மாதத்தில் சுமார் 200 யூனிட்கள் சேமிக்கப் படுகின்றது.

தொழிற்சாலையின் முழு மின்சக்தித் தேவையில் இந்த சேமிப்பு சொல்லிக்கொள்ளும் வகையில் ஒன்றும் இல்லை. ஆயினும் இதை யாவரும் கடைபிடிக்க முன்வந்தால் கணிசமான நீர் சேமிப்பும் மின்சார சேமிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் குறிப்பிடுகிறேன்.

உதாரணத்திற்கு 1.5 ton அறை குளிரூட்டும் எந்திரம் எட்டு மணிநேரம் வேலை செய்தால் 2.5 லிருந்து 3.0 லிட்டர் தண்ணீர் வெளியேற்றும். பெரிய திரை அரங்குகள், ’மால்’களில் நிறுவப்பட்டிருக்கும் ராட்சஸ குளிரூட்டும் எந்திரங்களால் ஒரு நகரத்திற்குத் தேவையான ஜெனரேட்டர் மற்றும் வாகனங்களுக்கான பாட்டரி தர சுத்திகரிக்கப்பட்ட நீரை சுலபமாக சேமிக்கலாம்.

இப்படி நம் முன் இருக்கும் பலப்பல வழிகளை முனைப்புடன் ஒருங்கு படுத்தினால் நீர் மட்டுமல்ல மின்சக்தியையும் சேமிப்பவர்களாவோம்.