Wednesday, August 5, 2009

கவிதைகள்

சேம் பின்ச்

என் உடை நிறமும்
உன் உடை நிறமும்
ஒன்றென சாக்லெட் கேட்கிறது
அகதி முகாம் குழந்தை.

****************

அவர்கள் அழுகையை
உங்களால் புரிந்து கொள்ள முடியாது.
காரணம்
விமானம் பறக்கும்போது
மேலே பார்த்தால்
உங்களுக்கு சுவாரஸ்யம்
அவர்களுக்கு மரணபயம்.

**********************

உங்களுக்கு இங்கே
தமிழென்ற
உணர்வில்லை.
அவர்களுக்கு அங்கே
தமிழென்றால்
உணவில்லை.

*********************

அவர்கள்
‘என் நாடு’ என்று துரத்தினார்கள்.
வலித்தது.
இவர்கள்
‘எந்நாடு?’ என்று கேட்டார்கள்
இன்னும் அதிகமாக வலித்தது.

*********************
நீங்கள்
முத்தெடுக்கவும்
மீன் பிடிக்கவும்
மூழ்கினீர்கள்.
நாங்கள்
உயிர்பிழைக்க
மூழ்கினோம்.

******************
எங்கள் எல்லாருடைய
ரேஷன் கார்டிலும்
இருந்தது ஒரு பெயர்.

‘இறந்துவிட்டார்
எடுத்துவிடுங்கள் அந்தப் பேரை’
என்கிறார்கள்.

இன்னும் ஒப்புக் கொள்ளவில்லை நாங்கள்.

போருக்காக இருந்த பேர்-
பேருக்காவது இருக்கட்டும்.

*************************




*************************


தீபாவளிக்கு
வெடித்த வெடிகுண்டை
பீதியுடன் பார்க்கிறது
அகதிமுகாம் குழந்தை.

அவர்களுக்கு
அருகில் இருப்பவர்களாவது
வெடிக்காமல் கொண்டாடுவோம்.

******************
‘நீங்க தமிழா’ என்று
அகதிமுகாமிலிருந்து
ஆர்வமாக ஒரு குரல் கேட்ட கேள்விக்கு
பதில் வந்தது
‘யெஸ்’என்று.

********************
அங்கே
அந்தச் சகோதரியின்
உடையைக் கிழித்தார்கள்
பொறுத்துக் கொண்டாள்.
அவர்கள் புரிதலில்லாதவர்கள் என்று.

இங்கே
அதே சகோதரிக்கு
கிழிந்த உடை தருகிறீர்கள்
அழுகிறாள்.
நீங்களும் புரிந்து கொள்ளவில்லையே என்று.

*************************

ஒளிந்துவிளையாடும்
ஒவ்வொரு முறையும்
குழிக்குள் சென்றமர்கிறாள்
அகதிமுகாம் சிறுமி.

*******************

நாங்கள் தொட்டில் கேட்டுக் காத்திருந்தோம்.
நீங்கள் உதவி செய்தது
சவப்பெட்டிக்கு.

********************


இந்தியாவின் உதவிகள் போலவே
இந்தக் கவிதைகளும்
காலம் தாழ்ந்து.

********************************************